புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூன் 15-ம் தேதிக்கு மேல் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியிடம், சுயேட்சை எம்எல்ஏவும், மனித நேய மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனருமான நேரு (எ) குப்புசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் சட்டப்பேரவையில் முதல்வரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பதாக கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. தற்போது கோடைக்காலம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. அதன் எதிரொலியாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதனால் மேகமூட்டம் ஏற்பட்டு கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்துவிட்டால் காற்றில் உள்ள ஈரப்பதம் குறைந்து தற்காலிகமாக நிலவி வந்த குளிர்ந்த மேகமூட்டங்கள் கலைந்துவிடும். அதேநேரத்தில் நமது நிலப்பரப்பானது வடகிழக்கு பகுதியில் இருப்பதால் தற்போது நிலவும் இந்த சூழ்நிலை மாறி வெப்பத்தின் அளவு கூடுதலாக இருக்கும் என்றும், மேலும் வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரிக்கு மேல் செல்லும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுவார்கள்.
மேலும், தற்போது கரோனா தொற்றின் தாக்கமும் பரவலாக அதிகரித்து வருகிறது. ஆகையால் இத்தகு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை இரண்டு வாரங்கள் தள்ளி வைத்து ஜூன் 15-ம் தேதிக்கு மேல் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.