சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றில் லுங்கி இங்கிடிக்கு மாற்று வீரராக ஆர்சிபி அணியில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முஸரபானி. தற்போது இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அவர், அந்த அணியின் முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி புரூக் விக்கெட்டுகளை பிளெஸ்ஸிங் முஸரபானி வீழ்த்தி உள்ளார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 565 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பென் டக்கெட் 140, ஸாக் கிராவ்லி 124, ஆலி போப் 171 ரன்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் முதல் இன்னிங்ஸில் 24.3 ஓவர்கள் வீசிய பிளெஸ்ஸிங் முஸரபானி, 143 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
யார் இந்த பிளெஸ்ஸிங் முஸரபானி? – 28 வயது வலது கை வேகப்பந்து வீச்சாளரான பிளெஸ்ஸிங் முஸரபானி, ஜிம்பாப்வே சர்க்யூட்டில் அதிவேகமாக பந்து வீசும் பவுலர்களில் ஒருவராக உள்ளார். அவரது பந்து வீச்சில் பவுன்ஸ் மற்றும் ஃபேஸ் இயல்பாகவே இருக்கும். அதற்கு அவரது உயரம் ஒரு காரணமாக அமைந்துள்ளது. ஜிம்பாப்வே அணிக்காக 13 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 70 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். பிஎஸ்ல், ஐஎல்டி20 மற்றும் சிபிஎல் போன்ற ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் அவர் விளையாடி உள்ளார்.
ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள இங்கிடி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி உடன் இணைய உள்ளார். ஹேசில்வுட்டின் உடற்தகுதி குறித்த கேள்விகள் உள்ள நிலையில் பிளெஸ்ஸிங் முஸரபானியை ஆர்சிபி நாடியுள்ளார். அவரை ரூ.75 லட்சத்துக்கு ஆர்சிபி ஒப்பந்தம் செய்துள்ளது.