மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தத் போட்டிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியாவுக்கு முதல் தொடராக அமைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழுவினர் மும்பையில் இன்று கூடுகின்றனர். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டதால் இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
25 வயதான ஷுப்மன் கில் தேர்வு செய்யப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அனுபவம் வாய்ந்த ஜஸ்பிரீத் பும்ரா அணியில் இடம் பெற்றாலும் நீண்ட கால அடிப்படை மற்றும் உடற்தகுதியை கருத்தில் கொண்டு அவருக்கு கேப்டன் பதவியை தேர்வுக்குழுவினர் வழங்க முன்வருவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
துணை கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்படக்கூடும். மேலும் கே.எல்.ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பக்கூடும். மாற்று தொடக்க வீரராக இடது கை பேட்ஸ்மேனான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் தேர்வு செய்யப்படக்கூடும். இதேபோன்று கருண் நாயர், சர்பராஸ் கான், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் தேர்வாக வாய்ப்பு உள்ளது.
சுழற்பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஓய்வு பெற்றுள்ளதால் அவரது இடத்தையும் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டத்தில் தேர்வுக்குழுவினர் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா பிரதான சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பெற்றாலும் அவருடன் கூடுதலாக 2 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்படக்கூடும்.
இந்த வகையில் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் இடம் பெறக்கூடும். அதேவேளையில் மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் இடம் பெறுவார்கள். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ராவுடன் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது ஆகியோர் இடம் பெறக்கூடும். உடற்தகுதி பிரச்சினையால் முகமது ஷமி தேர்வு செய்யப்படுவது கடினமே.