‘சக்திமான்’ படத்தை ரன்வீர் சிங் தயாரிக்கவிருப்பதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரன்வீர் சிங் நடிக்கவிருந்த சில படங்கள் திட்டமிடப்படி தொடங்கப்படவில்லை. மேலும், அப்பாவானதால் அவரும் குழந்தையுடன் நேரம் செலவழித்து வந்தார். தற்போது தான் மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார் ரன்வீர் சிங். ஆதித்யா தர் இயக்கி வரும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே ‘சக்திமான்’ தொடரின் உரிமையினை கைப்பற்றி ரன்வீர் சிங் தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த தொடரின் உரிமையினை கைப்பற்றி இருப்பதாகவும், இது தொடர்பாக முகேஷ் கண்ணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள். இது வைரலாக பரவியதால் ரன்வீர் சிங் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“புதிய சூப்பர் ஹீரோ தொடரை தயாரிக்க ரன்வீர் சிங் உரிமைகள் வாங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மையில்லை. தற்போது ஆதித்யா தர் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து ‘டான் 3’ படமும் இருக்கிறது” என்று ரன்வீர் சிங் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.