மும்பை: அடுத்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் அணியில் முதல் முறையாக அவர் வாய்ப்பு பெற்றுள்ளார். அவரது தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர் அஜித் அகர்கர் சொல்லியுள்ளது என்ன என பார்ப்போம்.
கடந்த ரஞ்சிக் கோப்பை சீசனில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி காலிறுதி ஆட்டம் வரை முன்னேற சாய் சுதர்ஷன் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் 13 ஆட்டங்களில் விளையாடி 638 ரன்கள் எடுத்துள்ளார். அதன் மூலம் அதிக ரன் எடுத்த பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் அவர் உள்ளார்.
23 வயதான அவர், இங்கிலாந்தில் உள்நாட்டு அளவில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்டுள்ளார். சர்ரே அணிக்காக 2023 மற்றும் 2024 சீசன் என மொத்தம் 8 இன்னிங்ஸில் 281 ரன்கள் எடுத்துள்ளார். அதில் அவரது சராசரி 33+ என உள்ளது கவனிக்கத்தக்கது. கவுன்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணி அடுத்தடுத்த சீசன்களில் பட்டம் வென்றுள்ளது கவனிக்கத்தக்கது.
இதோடு உள்ளூர் கிரிக்கெட்டிலும் அவரது செயல்பாடு சிறப்பாக உள்ளது. 29 ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆட்டத்தில் விளையாடி 1957 ரன்கள் எடுத்துள்ளார். 28 லிஸ்ட்-ஏ ஆட்டத்தில் 1396 ரன்களும், 58 டி20 ஆட்டத்தில் 2150 ரன்களும் எடுத்துள்ளார். இந்திய அணிக்காக 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடி உள்ளார்.
“இங்கிலாந்து லயன்ஸ் அணி (இங்கிலாந்து – ஏ) இந்தியா வந்திருந்தபோது சாய் சுதர்ஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் செயல்பாடு காரணமாக அவரை அணியில் தேர்வு செய்யவில்லை. சிறந்த உயர்மட்ட திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஆட்டக்காரராக உள்ளார். தேர்வுக்குழுவின் கவனம் அவர் மீது இருந்தது. ஆனாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை” என இந்திய சீனியர் ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கமிட்டி தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.