இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்பார்த்தது போலவே கருண் நாயர் தேர்வு செய்யப்பட்டு சர்பராஸ் கான் ஒழிக்கப்பட்டுள்ளார். இதற்கு அஜித் அகர்கர் கூறும் காரணமற்ற காரணம், ஒழிப்புக்கான சப்பைக்கட்டு போல்தான் தெரிகிறதே தவிர கடின உழைப்பாளியான ஒரு வீரருக்குச் செய்யும் நியாயமாகப் படவில்லை.
முன்பு கருண் நாயர் 300 அடித்த பிறகு 2 போட்டிகளில் சரியாக ஆடாததால் அணியை விட்டு விரட்டப்பட்டவர் தான், அதன் பிறகு அவர் மீண்டும் வர இத்தனை கால கடின உழைப்பும், அணித்தேர்வுக்குழு பலிகடா ஆக்க வேறொரு வீரரும் தேவைப்பட்டுள்ளது. ஆகவே முந்தைய பலிகடாவை வைத்து இன்று இன்னொரு பலிகடாவாக்கம் நடைபெற்றுள்ளது. அல்லது முந்தைய பலிகடாவை இன்றைய பலிகடாவுக்குப் பதில் பலியாக்கியுள்ளனர்.
எதிர்பார்த்தது போலவே ஷுப்மன் கில் கேப்டனாகியுள்ளார். இப்போது ஜெய்ஸ்வால், ராகுல் தொடக்கத்தில் களமிறங்க 3-ம் நிலையில் சாய் சுதர்சனும், 4ம் நிலையில் கோலியின் இடத்தில் கேப்டன் கில்லும் இறங்குவார்கள் என்றே தெரிகிறது.
முகமது ஷமி லாங் ஸ்பெல் வீசும் அளவுக்கு உடல் தகுதி இல்லை என்று இன்று கூறுகிறார் அகர்கர், ஆனால் அன்று சாம்பியன்ஸ் டிராபி அணியில் ஏன் தேர்வு செய்தார்? என்ற கேள்விக்குப் பதிலில்லை. கேட்டால் கடந்த வாரம் ஏதோ பிரச்சனை என்பதால் ஷமிக்கு எம்.ஆர்.ஐ எடுக்கப்பட்டுள்ளது. அவரால் 5 டெஸ்ட் போட்டிகள் ஆட முடியாது என்கிறார்.
அதே போல் ஹர்ஷித் ராணா ஆஸ்திரேலியா தொடரில் நன்றாகவே வீசினார், அவரது உடல் தகுதியை கேள்விக்குட்படுத்தி அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளனர். இதற்கும் சரியான காரணங்களை அஜித் அகர்கர் சொல்லவில்லை. முத்தாய்ப்பாக ஏன் சர்பராஸ் கான் என்ன தவறு செய்தார்? என்று கேட்டால், “சில வேளைகளில் அணியின் நலனைக் கருதி இத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது” என்கிறார் சர்பராஸ் கானை எடுக்க முடியாத அளவுக்கு என்ன அணியின் நலன் என்பது அகர்கருக்கும் கம்பீருக்கும்தான் வெளிச்சம்.
நியூஸிலாந்து தொடரில் இரண்டு அரைசதங்கள் ஒரு 150 என்று அடித்த பிறகு ஆஸ்திரேலியாவில் அவரை அணியில் எடுக்கவே இல்லை. இன்று கருண் நாயரின் அனுபவம் கைகொடுக்கும் என்கிறார் அகர்கர், ஆனால் அன்று ஆஸ்திரேலியாவில் அனுபவசாலியான சர்பராஸ் கான் இருக்க, தேவ்தத் படிக்கல்லை அணியில் எடுத்து ஆடவைத்தனர். இவற்றையெல்லாம் அகர்கரிடம் எந்த ஒரு பத்திரிகையாளரும் ஊடகமும் கேட்பதில்லை.
சர்பராஸ் கான் கிரிக்கெட் கரியர் இத்தோடு முடித்து வைக்கப்படுவதாகவே நாம் நினைக்க வேண்டியுள்ளது. குறைந்தது அவரிடமாவது உரிய காரணங்களைக் கூறுவார்களா என்பதும் வெளிப்படையாகத் தெரியவில்லை.
உள்நாட்டு கிரிக்கெட் பார்ம்தான் இந்திய அணித்தேர்வில் தாக்கம் பெறும் என்று வாய் கிழிய பேசுகிறார்கள். ஆனால் சாய் சுதர்ஷனை ஐபிஎல் ஃபார்ம் அடிப்படையில்தான் தேர்வு செய்துள்ளனர். ஏனெனில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது சராசரி 40-ற்கும் கீழ்தான். ஆகவே அஜித் அகர்கரின் பதில்கள் எல்லாமே முன் கூட்டியே பல அழுத்தங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு வழங்கும் சப்பைக்கட்டுக்களாகவே தொனிக்கின்றன.
நிச்சயம் சர்பராஸ் கான் மனமுடைந்துதான்போயிருப்பார். இன்னும் எத்தனைக் காலம் தான் அவரும் நிச்சயமற்ற டெஸ்ட் தேர்வுக்காகத் தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும்?