ஜெனீவா: 38 வயதான செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச், ஒற்றையர் ஆடவர் பிரிவில் தனது 100-வது பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ரோஜர் ஃபெடரர் மற்றும் ஜிம்மி கான்னர்ஸ் ஆகியோர் தான் 100+ பட்டங்களை ஒற்றையர் பிரிவில் வென்றுள்ளனர். தற்போது அந்த வரிசையில் ஜோகோவிச் 3-வது வீரராக இணைந்துள்ளார்.
சனிக்கிழமை அன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஜெனீவா ஓபன் இறுதிப் போட்டியில் ஹூபர்ட் ஹர்காக்ஸை 5-7, 7-6(2), 7-6(2) என்ற செட் கணக்கில் வீழ்த்தி, தனது 100-வது பட்டத்தை ஜோகோவிச் வென்றார். சுமார் மூன்று மணி நேரம் ஐந்து நிமிடங்கள் இந்த ஆட்டம் களிமண் தரையில் நடைபெற்றது.
24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், கடைசியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் கடந்த ஆண்டு தங்கம் வென்றிருந்தார். அதன் பின்னர் அவர் பட்டம் வெல்லவில்லை. மியாமி மாஸ்டர்ஸ் மற்றும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அவர் தோல்வியை தழுவி இருந்தார்.
100-வது முறையாக பட்டம் வெல்வது எண்ணி தான் பெருமை கொள்வதாக ஜோகோவிச் தெரிவித்தார். அதற்காக தான் பயிற்சி மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். மூன்று முறை பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றுள்ள அவர், இந்த முறையும் அதில் பங்கேற்கும் வகையில் பாரிஸ் சென்றுள்ளார். பிரெஞ்சு ஓபன் 2025 தொடரில் அமெரிக்க வீரர் உடன் திங்கட்கிழமை அன்று முதல் சுற்று ஆட்டத்தில் அவர் விளையாடுகிறார்.