பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முன்னேறியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று தொடங்கியது.
நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவு ஒற்றையர் சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்காவும், ரஷ்ய வீராங்கனையான கமீலா ரகிமோவாவும் மோதினர். இதில் அரினா சபலென்கா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் கமீலாவை எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற மகளிர் ஒற்றையர் சுற்று ஆட்டங்களில் எலீனா ஸ்விட்டோலினா (உக்ரைன்) 6-1, 6-1 என்ற கணக்கில் துருக்கி வீராங்கனை ஜெய்னப் சோன்மெஸ்ஸையும், ஜெர்மனியின் இவா லிஸ் 6-0, 6-3 என்ற கணக்கில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டீர்ன்ஸையும், கனடாவின் விக்டோரியா போக்கோ 6-1, 7-6(4) என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் லுலு சன்னையும், சுவிட்சர்லாந்தின் விக்டோரிஜா கோலுபிக் 3-6, 6-0, 6-4 என்ற செட் கணக்கில் செக். குடியரசின் பெட்ரோ குவிட்டோவாவையும், ஹங்கேரியின் அன்னா பான்டர் 7-6(2), 6-3 என்ற கணக்கில் ஜெர்மனியின் லாரா செய்ஜ்மண்டையும் வீழ்த்தினர்.
ஆடவர் பிரிவு: ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் செர்பிய வீரர் ஹமாத் மெட்ஜெட்டோவிக் வெற்றி பெற்றார்.
ஹமாத் 6-3, 6-3, 7-6 (2) என்ற செட் கணக்கில் போலந்து நாட்டின் வீரர் கமீல் மஜ்செர்ஜாக்கை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் ஹங்கேரியினஅ மார்ட்டன் பக்சோவிக்ஸ் 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் டிரிஸ்டன் ஸ்கூல்கேட்டை வீழ்த்தினார்.