சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்தவர் தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரேவிஸ். இருப்பினும் தனக்கு கிடைத்த வாய்ப்பு மூலம் அவர் கெத்து காட்டியுள்ளார்.
22 வயதான அவர், நடப்பு ஐபிஎல் சீசனில் 6 இன்னிங்ஸ் விளையாடி 225 ரன்கள் விளாசினார். பேட்டிங் சராசரி 37.50, ஸ்ட்ரைக் ரேட் 180. 13 ஃபோர்கள் மற்றும் 17 சிக்ஸர்களை விளாசி உள்ளார். 2 அரைசதம் பதிவு செய்துள்ளார். மொத்தம் 125 பந்துகளை இந்த சீசனில் அவர் எதிர்கொண்டார். ஒருமுறை மட்டுமே டக் அவுட் ஆனார். மற்ற அனைத்து இன்னிங்ஸிலும் 20+ பந்துகளை எதிர்கொண்டு விளையாடியுள்ளார்.
இந்த சீசனில் கடும் பின்னடைவுகளையும், எதிர்மறைகளையும் எதிர்கொண்ட சிஎஸ்கே அணிக்கு கிடைத்த மீட்பர் என்றும் டெவால்ட் பிரேவிஸை சொல்லலாம். அடுத்த சீசனில் சிஎஸ்கே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அதன் ஓர் அங்கமாக இவரது ஆட்டமும் இருக்கும். அது நடந்தால் எதிரணிகளுக்கு சிஎஸ்கே அச்சுறுத்தலாக விளங்கும்.
குஜராத் டைட்டன்ஸ் உடனான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை பிரேவிஸ் பெற்றார். அப்போது அவர், “நான் மகிழ்ச்சியாக உள்ளேன். எனது ஆட்டத்தை அனுபவித்து விளையாடுகிறேன். அதை தான் நான் எப்போதும் விரும்புவேன். கள சூழல் வெப்பமானதாக இல்லை என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இது மாதிரியான இன்னிங்ஸை அணிக்காக ஆட வேண்டும் என விரும்பினேன். அதை செய்ததில் மகிழ்ச்சி. ஏபி டிவில்லியர்ஸ் உடன் என்னை ஒப்பிடுகின்றனர். அதை எனக்கான பாக்கியமாக கருதுகிறேன். எனது ஆட்டத்தை மேம்பட செய்ததில் அவருக்கு பங்கு உண்டு. நான் என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆட விரும்புகிறேன்” என்றார்.