ஜிம்பாப்வே அணி இங்கிலாந்துக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடி தோற்றது, இதில் சிகந்தர் ரசா 2-வது இன்னிங்ஸில் 60 ரன்களை அடித்தார். ஆனால், அவருக்கு கடந்த 24 மணி நேரம் கடுமையான பிரயாணமாகவும் வெவ்வேறு உணவுகளுமாக அமைந்தது. ஆனால், கஷ்டப்பட்டது வீண் போகாமல் பாகிஸ்தான் சூப்பர் லீகில் லாகூர் அணியை வெற்றி பெறச் செய்தார்.
இங்கிலாந்து டெஸ்ட்டை முடித்த கையோடு பர்மிங்ஹாமில் இரவு உணவை முடித்துக் கொண்டு துபாய்க்கு விமானம் ஏறி எகானமி பிரிவில் பயணித்து துபாயில் காலை உணவு, பிறகு அபுதாபியில் மதிய உணவு எடுத்துக் கொண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்க லாகூர் விமானம் பிடித்து வந்திறங்கி. லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்கு வெற்றி ரன்களை அடித்து கோப்பையை வெல்லச் செய்தார் சிகந்தர் ரசா.
இதற்கு முன்னரும் கூட இங்கிலாந்திலிருந்து பாகிஸ்தான் வந்து லாகூர் குவாலண்டர்ஸ் அணி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற உதவியதும் குறிப்பிடத்தக்கது. கடாஃப் ஸ்டேடியத்தில் லாகூர் குவாலண்டர்ஸ் கேப்டன் ஷாஹின் அஃப்ரீடி தன் பிளேயிங் லெவனை அறிவிக்கையில் சிகந்தர் ரசா, ஸ்டேடியம் நோக்கி வந்து கொண்டுதான் இருந்தார். குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆடினார், வெற்றி ரன்களை அடித்தார்.
இது குறித்து சிகந்தர் ரசா கூறும்போது, “என் பணியை முடிக்கவே வந்தேன். போட்டியைத் தோற்றிருந்தால் கூட குறைந்தது நான் என் சகோதரர்களுடன் இருந்தேன் என்ற மனநிறைவு கொண்டிருப்பேன். அணி என்னை இங்கு வந்து ஆட விரும்பும் என்பதை நான் அறிவேன். நான் இறுதிப் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்வதில் அணி உரிமையாளரும் கேப்டனும் கடந்த 24-36 மணி நேரமாக எத்தனை முயற்சி மேற்கொண்டிருப்பார்கள்! அவர்கள் செய்த முயற்சி நம்பமுடியாதது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் 25 ஓவர்களை வீசியிருந்தேன். பேட்டிங்கிலும் 20 ஓவர்கள் ஆடினேன். பர்மிங்ஹாமில் இரவு உணவு எடுத்துக் கொண்டேன். துபாயில் காலை உணவு, அபுதாபியில் மதிய உணவு. பிறகு பாகிஸ்தானில் மீண்டும் இரவு உணவு. இதுதான் தொழில்முறை கிரிக்கெட் வீரனின் வாழ்வு. இத்தகைய வாழ்வு எனக்குக் கிடைத்ததில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்” என்றார் சிகந்தர் ரசா.
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி நிர்ணயித்த இலக்கு 202 ரன்கள். 39 வயது சிகந்தர் ரசா இறங்கும்போது லாகூர் அணி வெற்றி பெறும் நிலையில் இல்லை. இறங்கினார் ரசா, 7 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்களை விளாசி 22 ரன்களை எடுத்து ஒரு பந்து மீதமிருக்க வெற்றியை உறுதி செய்தார். முன்னதாக, பவுலிங்கில் அதிரடி வீரர் ரைலி ருசோவ் விக்கெட்டையும் ரசா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
“நான் டெஸ்ட் போட்டியில் ஆடி மிகவும் களைப்பாகவே இருந்தேன். இங்கு வந்து இறுதிப் போட்டியில் மனம் வெறுமையாக இருந்தது. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், ‘பந்தைப் பார்’ என்று. பந்து எங்கு பிட்ச் ஆனாலும் சிறந்த ஷாட்டை ஆடு என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.” என்றார் சிகந்தர் ரசா.