மாட்ரிட்: கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த கிளப் அணிகளில் ஒன்று ரியல் மாட்ரிட். அந்த அணியில் இருந்து விலகுகிறார் லூகா மோட்ரிச். சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஆட்டம்தான் ரியல் மாட்ரிட் அணிக்காக ஸ்பெயின் மண்ணில் அவர் விளையாடிய கடைசி போட்டி. அதில் 2-0 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ள சான்டியாகோ பெர்னாபியூ மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் லூகா விளையாடி விடைபெற்றார். அடுத்த மாதம் ரியல் மாட்ரிட் அணிக்காக அவர் கிளப் உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறார். ஆனால், அந்த தொடர் முழுவதும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதனால் தங்கள் ஆதர்ச நாயகனுக்கு ‘ஒன் லாஸ்ட் டைம்’ என்ற மனநிலையில் ஸ்பெயின் ரசிகர்கள் உற்சாகம் அளித்தனர்.
சுமார் 13 ஆண்டு காலம் ரியல் மாட்ரிட் அணியில் முக்கிய வீரராக லூகா ஜொலித்தார். 2012-ல் ரியல் மாட்ரிட் உடன் அவரது பயணம் தொடங்கியது. 591 ஆட்டங்கள் விளையாடி உள்ளார். மொத்தம் 30 டிராபிகளை அவர் அங்கம் வகித்த ரியல் மாட்ரிட் அணி வென்றுள்ளது. இதில் 6 சாம்பியன்ஸ் லீக் பட்டம் ஆகும்.
“இந்த தருணம் நான் விரும்பாத ஒன்று. ஆனால், வந்துவிட்டது. இதுவொரு நீண்ட நெடும் பயணம். இந்த கிளப்பின் தலைவர், புளோரன்டினோ பெரெஸ், அணியின் பயிற்சியாளர்கள், சக வீரர்கள், எனது குடும்பம், ரசிகர்கள் என எல்லோருக்கும் எனது ஆழ்மனதிலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்றாக கூடி விளையாடினோம், வென்றோம். ஒன்று கூடி மகிழ்வான தருணங்களை அனுபவித்தோம். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எல்லோரும் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு என்னிடம் நன்றி. அந்த உள்ளுணர்வை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை” என மோட்ரிச் உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார்.