திருப்பூர்: கரைப்புதூர் சாய ஆலையில் மனிதக் கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டது திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்த வாகனமா என ஆய்வுக்கு வந்த நீதிபதி குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
திருப்பூர் அருகே கரைப்புதூரில் தனியார் சாய ஆலையில் உள்ள மனிதக் கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, திருப்பூர் சுண்டமேட்டை சேர்ந்த சரவணன், வேணு கோபால் மற்றும் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் விஷவாயு தாக்கி கடந்த 19-ம் தேதி உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு சாய ஆலை தரப்பில் தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையத் தலைவா் நீதியரசா் தமிழ்வாணன் தலைமையில் கடந்த 26-ம் தேதி ஆய்வு செய்தனர். இதில் ஆணைய உறுப்பினர்கள் செல்வ குமார், ஆனந்த ராஜா, பொன்தோஸ், ரேகா பிரியதா்ஷினி மற்றும் தூய்மை பணியாளா்கள் நல வாரிய முதன்மை அலுவலா் கோவிந்த ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து, தலா ரூ.6 லட்சம் வீதம் ரூ.18 லட்சத்தை வழங்கினர்.
தொடர்ந்து குழுவினர் சாய ஆலையில் ஆய்வு செய்த போது, மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்ட வாகனம் தனியார் வாகனம் என்ற போதிலும், அது மாநகராட்சி ஒப்பந்த வாகனம் என்பதால், ’திருப்பூர் மாநகராட்சி பணி’க்கானது என்பதை வாகனத்தின் முகப்பிலேயே பெரியதாக குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம், குழுவினர் கேட்டபோது, அவர்கள் அளித்த மழுப்பலான பதிலால் அதிருப்தி அடைந்ததனர்.
இது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்த பணியை மேற்கொள்ளும் வாகனம் என்றாலும், திருப்பூர் மாநகராட்சி பணி என்பதை பெரியதாக வாகனத்தில் முகப்பில் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்று திருப்பூர் மாநகரில் ஏராளமான வாகனங்கள் உலா வரலாம் என தெரிய வருகிறது. மாநகராட்சி வாகனம் என்றாலும், சம்பவம் நிகழ்ந்தது புறநகர் பகுதி. மாநகராட்சியில் ஒப்பந்த வேலை செய்தாலும், இப்படி பல வாகனங்கள் வலம் வருவதால், தொழில்துறை பகுதியில் பல்வேறு அத்துமீறல்கள் நடைபெறலாம் என சந்தேகிக்கிறோம்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு தெரியப்படுத்தி உள்ளோம். இன்றைக்கு 3 பேர் உயிரிழந்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் வருத்தத்தை உண்டாக்குகின்றன. இது தொடர்பாக திருப்பூர் மாநகராட்சியிலும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. மனிதக் கழிவை அகற்றும் பணிக்கு சென்ற, மாநகராட்சியின் ஒப்பந்த வாகனத்தின் முன்பாகம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. இது போன்ற வாகனங்கள் மாநகராட்சியின் பெயரை பயன்படுத்திக்கொண்டு சாலையில் ஓடுவதும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் ஆபத்து தான்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எஸ்.ராம மூர்த்தி கூறும்போது, “திருப்பூர் மாநகராட்சியின் ஒப்பந்த வாகனம் இல்லை. ஆனால் மாநகராட்சி யின் ஒப்பந்த பணி வாகனம் என வாகன முகப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து இதுபோன்று இருக்கும் வாகனங்களை கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன உரிமையாளரான சின்னச்சாமிக்கும், மாநகராட்சி பணிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இனி இதுபோன்று நடக்காமல் இருக்க, ஒப்பந்த வாகனங்களின் முகப்பில் தெரியாதபடி இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மனிதக் கழிவு தொட்டியை சுத்தம் செய்வதற்கு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். சரியான பாதுகாப்பு கருவிகள் அல்லது உபகரணங்கள் இல்லாமல் அபாயகரமான சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு, தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.