கிண்டி மகளிர் ஐடிஐயில் சேர விரும்பும் மாணவிகள் வரும் ஜூன் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மகளிர் ஐடிஐயில் 2025ம் ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் கணினியில் எம்பிராய்டிங் வடிவமைப்பு, அலங்கார நுட்பங்கள், ஃபேஷன் தொழில் நுட்பம், கட்டிடக்கடை வரைவாளர், தகவல் தொடர்பு தொழில் நுட்பம், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், தையல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
அதன்படி 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள், மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை உட்பட தேவையான சான்றிதழ்களுடன் என்ற இணையத்திலும், கிண்டியில் உள்ள மகளிர் ஐடிஐயை நேரடியாக தொடர்பு கொண்டும் வரும் ஜூன் 13ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். பயிற்சிபெறும் மாணவியருக்கு விலையில்லா மடிக் கணினி, மிதி வண்டி, சீருடை, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 உள்ளிட்டவை வழங்கப்படும்.
பயிற்சி இலவசம். பயிற்சி முடித்தவுடன் தொழிற் பழகுநர் பயிற்சியும், பிரபல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப் படும். தகுதியுள்ள மாணவிகள் கூடுதல் விவரங்களை 044 – 2251 0001, 94990 55651 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.