கடப்பா: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் 2-ம் நாளான நேற்று என்.டி.ராமாராவின் பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும், அக்கட்சியின் தேசிய தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பிறகு சந்திரபாபு நாயுடு மாநாட்டில் பேசியதாவது: 1995-ம் ஆண்டு முதல் இப்போது வரை 30 ஆண்டுகள் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவராக உள்ளேன். இப்போது மீண்டும் 2 ஆண்டுகளுக்கு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளேன். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் தவறாமல் நிலை நாட்டுவேன்.
தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு வரலாறு உள்ளது. நக்ஸலைட்டுகளை ஒழிக்க தெலுங்கு தேசம் கட்சி போராடியது. அதேபோல், மாநிலத்தில் ரவுடிக்களை ஒழித்தோம். ராயலசீமா மாவட்டங்கள் ஒரு காலத்தில் வறட்சி மாவட்டங்களாக இருந்தன. ஆனால், அதே ராயலசீமாவிற்கு காலேறு – நகரி, ஹந்திரி-நீவா குடிநீர் கால்வாய் திட்டங்களை கொண்டு வந்தது தெலுங்கு தேசம் கட்சிதான்.
இவ்வாறு அவர் பேசினார்.