திருவனந்தபுரம்: ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று தான் கூறியது கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சூழலில், “அது, அன்பினால் சொல்லப்பட்டது” என்று இந்த சர்ச்சையில் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை நடிகர் கமல்ஹாசன் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், “நிறைய வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழி வரலாற்றை கற்பித்திருக்கிறார்கள். நான் எதையும் அர்த்தப்படுத்திச் சொல்லவில்லை. அரசியல்வாதிகள் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேசுவதற்கான நிபுணத்தும் இல்லாதவர்கள்.
ஒரு ‘மேனன்’ எங்களின் முதல்வராக இருந்த மாநிலம் தமிழகம், எங்களின் முதல்வராக ‘ரெட்டி’ இருந்திருக்கிறார். எங்களின் முதல்வராக ‘தமிழர்’ இருந்திருக்கிறார். கன்னட ஐயங்கார் ஒருவரும் எங்களின் முதல்வராக இருந்திருக்கிறார். இது தமிழக அரசியல் பாரம்பரியத்தைக் காட்டுகிறது. மொழி பற்றி பேசுவதற்கான தகுதி அரசியல்வாதிகளுக்கு இல்லை. நான் உட்பட இதுபோன்ற விஷயங்களைப் பேச அவர்களுக்கு தகுதி இருப்பதில்லை. இந்த ஆழமான விவாதத்தை வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், மொழி அறிஞர்களிடம் விட்டுவிடுவோம்.
தமிழகத்தில் எனக்கு நெருக்கடி வந்தபோது, கன்னடர்கள் தங்களது ஊருக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். அன்பின் காரணமாகவே நான் அவ்வாறு கூறினேன். அன்பு எப்போதும் மன்னிப்பை எதிர்ப்பார்க்காது” என்றார் கமல்ஹாசன்.
கமல் கருத்தும், கர்நாடக எதிர்ப்பும்: முன்னதாக, சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’ என்று கூறி இருந்தார். கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கமல்ஹாசன் தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது அவருக்கு (கமல்ஹாசன்) தெரியாது” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் கருத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்புகள் பெலகாவி, மைசூர், பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. பெலகாவி உள்ளிட்ட சில இடங்களில் கமல்ஹாசனின் சுவரொட்டிகளை எரித்து, அவருக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். தனது கருத்துக்காக அவர் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அவ்வாறு மன்னிப்பு கேட்கத் தவறினால், கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்படுவதைத் தடுப்போம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இந்தப் பின்னணியில் கமல்ஹாசனின் இந்த விளக்கம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்புமணி ஆதரவு: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ் மொழியின் முதுமையை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கதாகும்.
உலகின் மூத்த மொழிகளாக அறியப்படுபவை லத்தீன், கிரீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், அரபி, மாண்டரின் உள்ளிட்டவை தான், இந்த மொழிகள் அனைத்தையும் விட மூத்த மொழி அன்னைத் தமிழ்தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. தாயை விட மகள் மூத்தவராக இருக்க முடியாது. இதன் மீது எவரும் வினா தொடுக்க முடியாது.
கன்னட மொழிக்கென்று பல சிறப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. 2004-ஆம் ஆண்டில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னடமும், தெலுங்கும் 2008-ஆம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன. எனவே, அனைத்து மொழிகளும் அவற்றின் பழமை, இலக்கியச் செழுமைக்காக போற்றப்பட வேண்டும். அதை விடுத்து மொழிகளை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.