சென்னை: அரசு பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவகாலத்தில் பயன்படுத்தும் மகப்பேறு விடுப்பை, தகுதிகாண் பருவகால கணக்கில் எடுத்துக் கொள்வது தொடர்பான முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறை சார்பில், தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையின் விவரம்: தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்.28-ம் தேதி நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில், “திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாதமாக இருந்த விடுப்பு கடந்த 2021 ஜூலை 1 முதல் ஓராண்டாக உயர்த்தப்பட்டு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதுள்ள விதிகள்படி மகப்பேறு விடுப்புக்காலம் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
இதனால், அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவத்தை உரிய காலத்துக்குள் முடிக்க முடியாமல் அவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது. மகளிர் முன்னேற்றத்துக்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அரசு, அரசு பணியில் உள்ள மகளிரின் பணி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் மகப்பேறு விடுப்பு காலத்தை அவர்களின் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்” என அறிவித்திருந்தார்.
முதல்வரின் அறிவிப்புக்கிணங்க ஆணைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, திருமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகாண் பருவத்தின்போது எடுத்துக் கொள்ளும் மகப்பேறு விடுப்புக் காலம் அவர்களின் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சிறப்பு அல்லது தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்ட தகுதிகாண் பருவ பணிக்காலம் கடந்த ஏப்.28-ம் தேதி முடிவு பெறாதவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். ஏப்.28-ம் தேதிக்கு முன் தகுதிகாண் பருவ பணிக்காலம் முடிந்திருந்தால் இந்த சலுகை பொருந்தாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.