“எப்போதும் ஆட்டத்திறன் பற்றியே கணக்கில் எடுக்க வேண்டிய தேவையில்லை. ஆட்டத்திறனைக் கொண்டுதான் ஒருவர் ஓய்வு பெற வேண்டும் எனில், சில கிரிக்கெட் வீரர்கள் 22 வயதிலேயே ஓய்வு பெற வேண்டியதுதான்” என்று எம்.எஸ்.தோனி தன் ஓய்வு முடிவு குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார். இது போன்ற ஒரு வாதத்தை எந்த ஒரு வீரரும் இதுவரை உதிர்த்ததில்லை.
அவர் இப்படிக் கூறுவதன் பின்னணியில் அவரது மனநிலை தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதன் உள்ளர்த்தம் என்னவெனில்,
1. நான் ஓய்வு பெறுவது குறித்து வேறு யாரும் கருத்து சொல்ல உரிமை இல்லை.
2. ஆட்டத்திறன் பற்றி பேசாதீர்கள்! அப்படியே ஆட்டத்திறன் பற்றி பேசினாலும் நான்தான் என் ஆட்டத்திறனை அறுதியிட வேண்டும், மற்றவர்கள் அல்ல. அதாவது நான் 50 அடிக்க வேண்டிய அவசியமில்லை, நான் 5 அடித்தாலே அது பங்களிப்புதான் என்பது அவரது வாதத்தின் உள்ளர்த்தம்.
3. கிரிக்கெட்டில் வயது ஒரு பெரிய விஷயமல்ல. நான் நினைத்தால் எத்தனை வயது வரை வேண்டுமானாலும் ஆடுவேன்… ஊன்று கோல் வைத்துக் கொண்டாவது ஆடுவேன், அதை என் ஆட்டத்திறன் போய் விட்டது என்று கூறி நான் எத்தனை வயதானாலும் ஆடும் (சம்பாதிக்கும்) உரிமையைத் தடுக்க முடியாது.
இதில் கேப்டன் கூல் தோனியின் அப்பட்டமான ‘ஈகோ’ ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், ஆட்டத்திறன் ஓய்வுக்கான அளவுகோல் என்றால் 22 வயதிலேயே சிலர் ஓய்வு பெற வேண்டியதுதான் என்பது பலவிதங்களில் குதர்க்கமும் சுயநலமும் கொண்டது.
ஏனெனில், 22 வயதில் ஆட்டத்திறன் சோடை போனால், அந்த வீரருக்கு வயது இருக்கிறது என்று வாய்ப்புக் கொடுத்து அவரை ஃபார்முக்குத் திருப்பலாம், அவருக்கு கிரிக்கெட் ஆடுவதற்கான வயது இருக்கிறது, குறைந்தது 8-10 ஆண்டுகால கிரிக்கெட் அவரிடம் இருக்கிறது, பெரிய டேலன்ட், ஒன்றிரெண்டு பெர்பாமன்சை வைத்து முடிவு கட்டக் கூடாது என்று வாய்ப்பு கொடுப்பார்கள். அவரும் மீண்டெழுந்து வருவார், ஸ்டீவ் வாஹ் கிரிக்கெட் வாழ்க்கை இதற்கு ஓர் உதாரணம்.
இன்னும் ஒரு மாதம் போனால் தோனிக்கு வயது 45. அவர் கூறும் 22 வயதை விட இரு மடங்கு அதிகமாக உள்ளவர். பெர்பாமன்ஸ் பற்றி பேசக்கூடாது. வயதுக்கும் பெர்பாமன்சுக்கும் சம்மந்தமில்லை என்று கூறிக்கொண்டு அணிக்குச் சுமையாக எத்தனைக் காலம்தான் அவர் ஆட முடியும்?
22 வயது எங்கே 45 வயது எங்கே? 45 வயதிலும் கூட ஒருவரது பெர்பார்மன்ஸ் போய்விட்டது, தடுமாறுகிறார், கிழட்டுத்தனம் வந்து விட்டது என்று கூறி ஓய்வு பெறுங்கள் என்று கூறுவது தவறு என்று தோனி 22 வயதுக்காரருடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்டாரேயானால் நமக்கு இருக்கும் பல கேள்விகளில் ஒன்று, இந்த 22 வயது ஓய்வு குறித்த ‘ஞானம்’ ஏன் அவர் கேப்டனாக இருந்தபோது சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், யூசுப் பதான் போன்றோரை ஒழித்துக் கட்டியபோது பிறக்கவில்லை? ஒருவேளை ஞானம் பிறக்க வயது உச்ச வரம்பு வைத்திருக்கிறாரோ என்னவோ தோனி.
அவர்கள் ரிட்டையர் ஆனபோது என்ன வயது? இப்போது ரிட்டையர் ஆக மறுக்கும் தோனிக்கு என்ன வயது? ஆகவே, தனக்கென வரும்போது வயது ஒரு பிரச்சினையல்ல, ஆனால் தான் கேப்டனாக இருக்கும்போது இதே 22 வயது தியரியை அப்ளை செய்து சேவாக், யுவராஜ், ஹர்பஜன், யூசுப் பதான் போன்றோரையும் கொஞ்சம் வாழ வைத்திருக்கலாமே தோனி?
வடிவேலு டயலாக்தான் நினைவுக்கு வருகிறது. தனக்கு வந்தா ரத்தம், மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி!