சென்னை: வடசென்னை ஐடிஐயில் ரோபோடிக்ஸ், ட்ரோன் விமானி போன்ற தொழிற்பிரிவு படிப்புகளில் சேர ஜூன் 13-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு, பயிற்சி துறையின்கீழ் இயங்கி வரும் வடசென்னை ஐடிஐயில் 2025-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி, கட்டிட பொறியியல் உதவியாளர், கட்டிட பட வரைவாளர், இயந்திர பட வரைவாளர், லிஃப்ட் மெக்கானிக், எலெக்ட்ரீசியன், ஏசி – ஃப்ரிட்ஜ் டெக்னீசியன், வயர்மேன் ஆகிய 2 ஆண்டு தொழில் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
அதேபோல, ஓராண்டு படிப்புகளான பிளம்பர், வெல்டர், இன்டீரியர் டிசைன் மற்றும் டெக்கரேஷன் மற்றும் 6 மாத தொழில் பிரிவான ட்ரோன் விமானி, தொழில் துறை 4.0 திட்டத்தின்கீழ் ஓராண்டு தொழிற்பிரிவுகளான ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம், டிஜிட்டல் உற்பத்தி, 2 ஆண்டு தொழிற்பிரிவுகளான எலெக்ட்ரிக் வாகன மெக்கானிக், வடிவமைப்பாளர், வர்ச்சுவல் வெரிஃபயர், அட்வான்ஸ் சிஎன்சி டெக்னீசியன் உள்ளிட்ட படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த படிப்புகளுக்கு 8, 10-ம் வகுப்பு முதல் டிப்ளமோ, பட்டப் படிப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் சேர விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜூன் 13-ம் தேதிக்குள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ, வண்ணாரப்பேட்டையில் உள்ள ஐடிஐ வளாகத்தில் நேரடியாகவோ விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
இது இலவச பயிற்சி. இதற்கு கட்டணம் கிடையாது. பயிற்சி காலத்தில் மாதம்தோறும் மாணவர்களுக்கு ரூ.750 உதவி தொகை மற்றும், தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின்கீழ் ரூ.1,000 வழங்கப்படும். கூடுதல் விவரங்களை அறிய 9499055653 மற்றும் 8144622567 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.