புதுடெல்லி: உலக அழகி 2025-ம் ஆண்டுக்கான போட்டி இந்தியாவில் ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார் மிஸ் இங்கிலாந்து மில்லா மேகி.
இந்நிலையில், இங்கிலாந்தின் ஊடக நிறுவனத்துடன் இந்தியாவில் நடைபெறும் உலக அழகி போட்டியில் தனக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் மீது சில குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார். “போட்டியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் அழகிகள் மேக்-அப் மற்றும் கவுன்களை அணிவதோடு நடுத்தர வயது ஆண்கள் சிலரை என்டர்டெயின் செய்ய வேண்டிய நிர்பந்தமும் இருந்தது. அது முற்றிலும் நம்பமுடியாத வகையில் இருந்தது. அந்த தருணத்தில் பாலியல் தொழிலாளி போல உணர்ந்தேன்.
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அதில் நான் கலந்து கொண்டேன். ஆனால், வித்தை காட்டும் குரங்குகளை போல நாங்கள் உட்கார வைக்கப்பட்டோம். ஆறு பேர் வீற்றிருக்கும் ஒரு மேசையில் இரண்டு போட்டியாளர்கள் அமர்ந்திருந்தோம். அவர்களை என்டர்டெயின் செய்ய வேண்டியது எங்களது பணியாக இருந்தது. சமூக மாற்றம் சார்ந்த எங்களது பேச்சுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை. அது தவறு என எனக்கு பட்டது. இதற்காக இங்கு நாங்கள் வரவில்லை. உலக அழகி போட்டிக்கு இருக்கின்ற மதிப்பு மங்கிவிட்டது. அப்போதே போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துவிட்டேன்” என மில்லா மேகி கூறியுள்ளார்.
உலக அழகி போட்டி வரலாற்றில், போட்டியில் இருந்து விலகிய முதல் மிஸ் இங்கிலாந்தாக மேகி அறியப்படுகிறார். அவருக்கு மாற்றாக மிஸ் இங்கிலாந்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சார்லோட் கிராண்ட், தற்போது இந்தியாவில் நடைபெறும் உலக அழகி போட்டியில் பங்கேற்றுள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி மே 10-ம் தேதி தொடங்கியது. இம்மாதம் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 120 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.