குமி: தென் கொரியாவின் குமி நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் இன்று (மே 27) தொடங்கியது. இதில் ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தங்கப் பதக்கம் வென்றார்.
26 வயதான அவர், பந்தய தூரத்தை 28:38.63 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வெல்லும் 3-வது இந்திய வீரர் குல்வீர் சிங் ஆவார். இதற்கு முன்னர் ஹரி சந்த் (1975), லட்சுமணன் (2017) ஆகியோர் தங்கம் வென்றிருந்தனர்.
ஜப்பானின் மெபுகி சுஸுகி (28:43.84) வெள்ளிப் பதக்கமும், பக்ரைனின் ஆல்பர்ட் கிபிச்சி ராப் (28:46.82) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். மற்றொரு இந்திய வீரரான சவான் பர்வால் (28:50.53) 4-வது இடம் பிடித்தார்.
முன்னதாக இந்தியாவின் பதக்க வேட்டையை தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் தொடங்கி வைத்தார். அவர், ஆடவருக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். செர்வின் பந்தய தூரத்தை 1:21:13.60 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்தார்.
சீனாவின் வாங் ஜாவோஜாவோ (1:20:36.90) தங்கமும், ஜப்பானின் கென்டோ யோஷிகாவா (1:20:44.90) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மற்றொரு இந்திய வீரரான அமித் (1:22:14.30) 5-வது இடம் பிடித்தார்.
மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி 58.03 மீட்டர் தூரம் எறிந்து 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். ஆடவருக்கான உயரம் தாண்டுதல் தகுதி சுற்றில் இந்தியாவின் சர்வேஷ் அனில் குஷாரே 2.10 மீட்டர் உயரம் தாண்டி 4-வது இடத்தை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
டெகத்லானில் 5 நிகழ்வுகள் முடிந்துள்ள நிலையில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் முதலிடத்தில் உள்ளார். இதில் இன்னும் 5 நிகழ்வுகள் உள்ளன.
ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டம் அரை இறுதியில் இந்தியாவின் விஷால் பந்தய தூரத்தை 46.05 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ரூபால் சவுத்ரி (53 விநாடிகள்), வித்யா ராம்ராஜ் (53.32 விநாடிகள்) ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் யூனுஷ் ஷா தகுதி சுற்றில் பந்தய தூரத்தை 46.96 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
முதல் நாள் முடிவில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கத்துடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சீனா 5 தங்கம், 2 வெள்ளியுடன் முதலிடத்திலும், ஜப்பான் 3 வெள்ளி, 2 வெண்கலகத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன.
பாக். தொடரில் நிதி பற்றாக்குறையால் டிஆர்எஸ் இல்லை: வங்கதேச கிரிக்கெட் அணி 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. முதல் போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 2-வது போட்டி 30-ம் தேதியும், கடைசி மற்றும் 3-வது போட்டி ஜூன் 1-ம் தேதி இதே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் நிதி பிரச்சினை கரணமாக டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.