புதுடெல்லி: விரைவு வர்த்தக தளமான இன்ஸ்டாமார்ட் தனது பெயரிலிருந்து அதன் தாய் நிறுவனமான ‘ஸ்விக்கி’யின் பெயரை நீக்கியுள்ளது. தனித்த பிராண்ட் அடையாளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிளிங்கிட்டை சொந்தமாக கொண்ட போட்டியாளரான ஜொமோட்டோ பங்குச்சந்தையில் எடேர்னல் என பெயர் மாற்றப்பட்ட சில நாட்களுக்கு பின்பு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு விநியோக வர்த்தகத்தைத் தாண்டி, விரைவு வர்த்தகம் இந்த நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க உந்துதலாக மாறியுள்ளது.
ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “ஸ்விக்கி செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இன்ஸ்டாமார்ட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனியாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியது. இன்ஸ்டாமார்ட் அதன் அடுத்தக்கட்டத்துக்குள் நுழையும்போது, இது பிராண்டின் தனித்த அடையாளத்தை பிரதிபலிக்கிறது. அதேநேரத்தில் ஸ்விக்கியின் உண்மையான அடையாளமும் இதில் இருக்கிறது. அது அதனை விரும்பத்தக்கதாக ஆக்குகிறது” என்று தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாமார்ட் வெளியிட்டுள்ள புதிய லோகோவில் இருக்கும் ‘S-Pin’ ஐகான், பிராண்டின் மூலத்துக்கான மரியாதை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஸ்விக்கி பிராண்ட்டின் தலைவர் மயூர் ஹோலா கூறுகையில், “இன்ஸ்டாமார்ட்டின் வாக்குறுதிகள், மளிகை பிரிவுகள், உணவு விநியோக பயனர்களைத் தாண்டியும் வளர்ந்துள்ளது. இது அதனைச் சொந்த மற்றும் விசுவாசமான பயனர்களைக் கொண்ட சேவையாக உருமாறியுள்ளது. அன்றாட வாழ்வில் தனிப்பட்ட மற்றும் அத்தியாவசியமான பங்களிப்பினைச் செய்து வருகிறது.
பெயர்மாற்றம் என்பது வெறும் காட்சி மாற்றம் மட்டுமில்லை. அது ஓர் அறிவிப்பு. இன்ஸ்டாமார்ட் அதன் தாய்நிறுவனத்தைத் தாண்டி வளர்ந்துள்ளது. இன்னும் ஸ்விக்கியின் நம்பிக்கையால் ஆதரிக்கப்படுகிறது. இன்ஸ்டாமார்ட்டின் புதிய அடையாளம் வேகம், தேர்வு மற்றும் அன்றாட வசதிகளில் அதனைத் தனித்த பிராண்டாக காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார். வரும் வாரங்களில் இருந்து இன்ஸ்டாமார்ட்டின் புதிய அடையாளம், அதன் செயலி, பேக்கிங், விநியோக பைகள் மற்றும் விளம்பரங்களில் இடம்பெறும் என தெரிகிறது.