மதுரை: ”உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் சர்வதேச அளவில் தமிழகம் சிறப்பிடம் பெற்று வருகிறது” என்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விழாவில் டீன் அருள் சுந்தரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் கழகம் சார்பில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த தொடர் கல்வித் திட்டம் விழா நடந்தது. மருத்துவக் கல்லூரி முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர், “தமிழக அரசு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனாலே, இந்தியாவிலே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சர்வதே அளவிலான புள்ளி விவரங்களிலும் தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து அவர்களது உடல் உறுப்புகளை பெறுவதில் சவாலானது.
மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை பெறுவது வரை ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் குறையாமல் அதே நிலையில் அவர்களது உடலை பராமரிக்க வேண்டும். மூளைச்சாவு அடைந்தவர்களை பராமரிப்பதற்கு மயக்கவில் நிபுணர்கள் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மூளைச் சாவு அடைந்தவர்கள் உடலில் இருந்து உறுப்புகளை ஒவ்வொன்றாக எடுப்பார்கள். கடைசியில் இதயத்தை எடுப்பார்கள்.
எடுத்தோடு கடமை முடிந்துவிடுவதில்லை. அந்த உறுப்புகளை மற்றவர்களுக்கு பாதுகாப்பாக பொருத்துவது சவாலானது. தற்போது இந்த சிகிச்சைக்கு என நவீன முறைகள் வந்துள்ளன. அடுத்த தலைமுறை மருத்துவர்களுக்கு இந்த நவீன தொழில் நுட்ப சிகிச்சைப் பற்றி எடுத்து சொல்வதற்காகவே அதற்கான பயிற்சியும், வழிகாட்டுதலுக்காகவுமே இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. மயக்கவியல் உறுப்பு மாற்று சிகிச்சை குறித்த மருந்து அறிவு சார் பரிமாற்றத்தையும், அது குறித்த புரிதலையும் மேம்படுத்துவதும் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்” என்று பேசினார்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் கே.செந்தில், மயக்கவியல் இயக்குநர் பேராசிரியர் எம்.கல்யாண சுந்தரம், ஏற்பாட்டுத் தலைவர் பேராசிரியர் ஜி.விஜயா மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து மயக்கவியல் சம்பந்தப்பட்ட வல்லுநர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.