சென்னை: மின்கம்பம் மேல் மின்கம்பிகள் அறுந்து விழுந்தால், உடனே மின்மாற்றிகளில் இருந்து மின்சாரம் வருவதை தானாகவே துண்டிக்கும் ‘எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்’ திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்த உள்ளது.
சென்னையில் வீடுகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு தரைக்கு அடியில் கேபிள் மூலமாகவும், மற்ற இடங்களில் மின்கம்பங்கள் மேலம் செல்லும் மின்கம்பிகள் மூலமாகவும் மின்விநியோகம் செய்யப்படுகிறது.
மழை, பலத்தக் காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது மின்கம்பிகள் அறுந்து விழுகின்றன. அப்போது, மின்விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மின்கம்பிகள் அறுந்து விழுந்ததும் அதற்கு மின்சாரம் வரும் மின்மாற்றிகளில் (டிரான்ஸ்ஃபார்மர்) இருந்து தானாகவே மின்விநியோகம் துண்டிக்கப்படும் திட்டத்தை செயல்படுத்த கடந்த 2022-ம் ஆண்டு மின்வாரியம் முடிவு செய்தது.
இதுதொடர்பாக, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன் அடிப்படையில், யானை வழித் தடங்களில் மின்கம்பி அறுந்து விழுவதால் ஏற்படும் மின்விபத்தைத் தடுக்க அங்குள்ள மின்மாற்றிகளில், மின்சாரம் செல்வதை உடனடியாக தானியங்கி முறையில் துண்டிக்கும் ‘மோல்டட் கேஸ் சர்க்கியூட் பிரேக்கர்’ திட்டம், 223 மின்மாற்றிகளில் பொருத்தப்பட்டுள்ளது.
அதே போன்ற தொழில்நுட்பத்தில் 2,136 மின்மாற்றிகளில் மின்சாரத்தை தானியங்கி முறையில் துண்டிக்கும் சாதனங்கள் பொருத்தப்பட உள்ளன.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தானியங்கி முறையில் மின்சாரத்தை துண்டிக்கும் 4 ஆயிரம் ‘எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர்’ கருவிகளை பொருத்த ஒப்பந்தப் பணிக்கு டெண்டர் கோரப்பட்டு, தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில், தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும்.
தற்போது, தானியங்கி முறையில் மின்சாரத்தை துண்டிக்கும் 4 ஆயிரம் கருவிகள், அடிக்கடி மின்கம்பிகள் அறுந்து விழும் இடங்களில் உள்ள மின்மாற்றிகளில் பொருத்தப்பட உள்ளன.
அவற்றின் செயல்பாடு பொருத்து, மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரவுபடுத்தப்படும்’’ என்றனர்.