சென்னை: ‘இந்து தமிழ் திசை நாளிதழ்’ எடுத்த முயற்சி காரணமாக, வாலாஜா சாலையில் உள்ள டி-1 காவல் நிலைய பேருந்து நிலையத்தில் அண்ணா சதுக்கத்தில் இருந்து வரும் அனைத்துமே நின்று செல்ல போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை, அண்ணாசாலை, அண்ணா சிலை சந்திப்பில் இருந்து வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கத்துக்கு இயக்கப்படும் மாநகரப் பேருந்து வழித்தடம் 2-ஏ, 29-ஏ, 27-பி, 29-டி மற்றும் விவேகானந்தர் இல்லத்துக்கு இயக்கப்படும் தடம் எண் 32-பி, 38-சி ஆகியவை டி-1 காவல் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.
அதே சமயம், அண்ணா சதுக்கம் மற்றும் விவேகானந்தர் இல்லத்தில் இருந்து திரும்பி வரும் பேருந்துகள் டி-1 காவல் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நிற்பது கிடையாது. அண்ணா சதுக்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் கலைவாணர் அரங்கம் பேருந்து நிறுத்தத்தில் நின்று விட்டு அடுத்ததாக, சிம்சன் பேருந்து நிலையத்திலும், அதேபோல், விவேகானந்தர் இல்லத்தில் இருந்து வரும் பேருந்துகள் திருவல்லிக்கேணி, ஆதாம் மார்க்கெட் பேருந்து நிலையத்திலும் நின்று விட்டு அடுத்ததாக சிம்சன் பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.
இடையில் உள்ள டி-1 காவல் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வது கிடையாது. இப்பேருந்து நிறுத்தத்தை ஒட்டி எல்லீஸ் சாலை உள்ளது. இங்கு ஏராளமான தனியார் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரிபவர்கள் பேருந்து ஏற கலைவாணர் அரங்கம் அல்லது சிம்சன் பேருந்து நிறுத்தத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. குறிப்பாக, பெண் ஊழியர்கள், வயதானவர்கள் மற்றும் இப்பகுதியில் வசிப்பவர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிப்படுகின்றனர்.
அதேபோல், எல்லீஸ் சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான தனியார் விடுதிகள் உள்ளன. இவற்றில் வெளியூர்களில் இருந்து வந்து தங்குபவர்கள் மீண்டும் ரயில் மூலம் தங்கள் ஊர்களுக்குச் செல்ல சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்துக்கு செல்கின்றனர். மூட்டை முடிச்சுடகளுடன் வரும் இவர்கள் அவற்றை சுமந்துகொண்டு சிம்சன் அல்லது கலைவாணர் அரங்கம் பேருந்து நிலையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.
எனவே, டி-1 காவல் நிலையத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அண்ணா சதுக்கம் மற்றும் விவேகானந்தர் இல்லம் ஆகிய இடங்களில் இருந்து வரும் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என பொது மக்களும், பயணிகளும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து இந்து தமிழ் திசை நாளிதழ் சார்பில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பொது மக்களின் நியாயமான கோரிக்கை இது என்பதை உணர்ந்த அமைச்சர் சிவசங்கர் உடனடியாக அனைத்துப் பேருந்துகளையும் டி-1 காவல் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது அங்கு அனைத்து சாதாரண பேருந்துகளும் நின்று செல்கின்றன. இதற்காக, பயணிகள் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும், இந்து தமிழ் திசை நாளிதழுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், டீலக்ஸ் பேருந்துகள் மட்டும் நிற்காமல் செல்கின்றன. எனவே, அப்பேருந்துகளையும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், இப்பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும் பேருந்துகளின் விவரங்கள் குறித்த அறிவிப்பு பலகையை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.