புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்த சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் வெளியிட்ட சமூக ஊடக பதிவுகளுக்கு எதிராக, ஹரியானா மாநில மகளிர் ஆணையத் தலைவர் ரேணு பாட்டியா புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டதாக சோனிபட் துணை காவல் ஆணையர் நரேந்தர் கடியன் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜாதேதி சர்பஞ்ச் மற்றும் பாஜக யுவ மோர்ச்சா பொதுச் செயலாளர் யோகேஷ் ஜாதேதியும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை கூறி மே 17 அன்று அலி கான் மீது தனித்தனியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
இரண்டு வழக்குகளில் ஒன்றில் அலி கான் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். யோகேஷ் ஜாதேதி தாக்கல் செய்த இரண்டாவது வழக்கில், அலி கான் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளுக்காக ஹரியானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அலி கான் மஹ்முதாபாத் மீதான வழக்குகளை அவசரமாக விசாரிக்க வாய்மொழியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் திங்கள்கிழமை (மே 19, 2025) ஏற்றுக்கொண்டார்.
தலைமை நீதிபதி முன் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சோனிபட் ராய் காவல் நிலையத்தில் அலி கானுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களை ரத்து செய்யக் கோரும் மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
“தேசபக்தியுடன் வெளியிட்ட அறிக்கைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தயவுசெய்து நாளை அல்லது அதற்கு அடுத்த நாளுக்கு அதை பட்டியலிடுங்கள்,” என்று சிபல் தலைமை நீதிபதியிடம் கேட்டார். இதையடுத்து, இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவித்ததாகவும், பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததாகவும் கூறி பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் அலி கான் கைது செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர்களில் ஒருவரான கபில் பால்யன் விளக்கினார். அலி கான் மீதான குற்றச்சாட்டுகள் அற்பமானவை என்றும், பல அரசியல் தலைவர்களும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் சமூக ஊடகங்களில் இதேபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.