புதுடெல்லி: பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பல கட்சிக் குழுவில் இருந்து விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைமை, மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் குறித்த இந்தியாவின் செய்தியை மற்ற நாடுகளுக்கு எடுத்துச் சொல்லும் குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. இதில், பல கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய யூசுப் பதான் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், யூசுப் பதானோ அல்லது திரிணமூல் காங்கிரஸின் வேறு எம்பிக்கள் யாருமோ அனைத்துக் கட்சிக் குழுவில் இடம் பெற மாட்டார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நிலைப்பாட்டை வலியுறுத்திப் பேசிய திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை அனுப்பும் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இருப்பினும், பாஜக அல்லாத கட்சிகள் என்று வரும்போது அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் ஒரு பகுதியாக யாரை அனுப்புவது என்பதை பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்ய முடியாது.
எந்தக் கட்சியிலிருந்து யார் செல்வார்கள் என்பதை மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக முடிவு செய்ய முடியாது. மத்திய அரசு நல்ல நோக்கத்தைக் காட்ட வேண்டும். எதிர்க்கட்சியில் உள்ள அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் பரந்த விவாதங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ திரிணமூல் கட்சி இந்த விவகாரத்தை அரசியலாக்கவில்லை. இதை திரிணமூல் கட்சியின் புறக்கணிப்பாகக் கருதக்கூடாது. நாங்கள் குழுவிலிருந்து விலகியதாக இதைப் பார்க்கக்கூடாது. ஆனால், எங்கள் கட்சியிலிருந்து யார் செல்ல வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். மத்திய அரசு அல்ல.” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, “நாட்டைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய அரசுக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. நமது ஆயுதப்படைகள் நமது நாட்டை பெருமைப்படுத்தியுள்ளன, அவர்களுக்கு நாம் என்றென்றும் கடன்பட்டுள்ளோம். வெளியுறவுக் கொள்கை முற்றிலும் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் உள்ளது. எனவே, மத்திய அரசு மட்டுமே நமது வெளியுறவுக் கொள்கையை முடிவு செய்து அதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க முடியும்.” என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.