புதுடெல்லி: சமீபத்தில் ஏற்பட்ட போர் பதற்றங்களின்போது பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோயில் பாகிஸ்தானால் குறிவைக்கப்பட்டது. இதனை இந்திய வான் பாதுகாப்பு படை எப்படி காப்பாற்றியது என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுடனான சமீபத்திய மோதலின் போது, இந்தியாவின் எல்லை மாநிலங்களில் உள்ள பல நகரங்களை ஆயுதப் படைகள் துணிச்சலுடன் பாதுகாத்தன. இந்த மோதலின்போது இந்தியாவின் முக்கிய கட்டிடங்களை குறிவைத்த பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பிற வகையான வான் தாக்குதல்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டன.
இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளான ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, எல்-70 வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் உள்ளிட்டவை அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலையும், பஞ்சாப் நகரங்களையும் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களிலிருந்து எவ்வாறு காப்பாற்றின என்பதற்கான ஒரு செயல் விளக்கத்தை ராணுவம் காட்சிப்படுத்தியது.
இதுகுறித்து 15-ம் காலாட்படை பிரிவின் கட்டளை பொது அதிகாரி மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி கூறுகையில், “உளவுத்துறையிலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, பொற்கோயில் போன்ற மதத் தலங்கள் உட்பட, எல்லை மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் கூடும் இடங்களை குறிவைக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கையை இந்திய ராணுவம் எதிர்பார்த்திருந்தது.
பாகிஸ்தான் ராணுவத்திடம் எந்த முறையான இலக்குகளும் இல்லை என்பதை அறிந்திருந்தும், அவர்கள் இந்திய ராணுவ முகாம்கள், மத இடங்கள் உட்பட பொதுமக்கள் இலக்குகளை குறிவைப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இவற்றில், பொற்கோயில் மிக முக்கியமானதாகத் தோன்றியது. எனவே பொற்கோயிலுக்கு முழுமையான வான் பாதுகாப்பு குடையை வழங்க கூடுதல் நவீன பாதுகாப்பு அமைப்புகளை நாங்கள் திரட்டினோம்.
மே 8 ஆம் தேதி அதிகாலை, இருள் சூழ்ந்த நேரத்தில், பாகிஸ்தான் ஆளில்லா வான்வழி ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ஒரு பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியது. இதை நாங்கள் எதிர்பார்த்ததால் முழுமையாக தயாராக இருந்தோம். மேலும் எங்கள் துணிச்சலான மற்றும் எச்சரிக்கையான ராணுவத்தினர் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மூலமாக, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களை முறியடித்து, பொற்கோயிலை குறிவைத்த அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தினர். இதனால், நமது புனித பொற்கொல்லையில் ஒரு கீறல் கூட வர அனுமதிக்கவில்லை.
பாகிஸ்தான் ராணுவத்தால் ஆதரிக்கப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக, பஹல்காமில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டன.
இந்த ஒன்பது இலக்குகளில், லாகூருக்கு அருகாமையில் உள்ள முரிட்கேவில், லஷ்கர்-இ-தொய்பா தலைமையகம் மற்றும் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம் ஆகியவை உள்ளன. இவை முழுமையான துல்லியத்துடன் தாக்கப்பட்டன. அதேபோல நாங்கள் பாகிஸ்தானின் ராணுவம் அல்லது பொதுமக்கள் கூடும் கட்டிடங்களை குறிவைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தும் ஒரு அறிக்கையையும் வெளியிட்டோம்” என்று அவர் கூறினார்.