அகமதாபாத்: முதல்முறையாக பாகிஸ்தானுக்குள் புகுந்து 100 கி.மீ தொலைவில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானை அச்சமடையச் செய்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
குஜராத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காந்திநகர் மாவட்டம் கோலாவாடா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் பேசியதாவது:
மோடி பிரதமராவதற்கு முன்பு, நாட்டில் தீவிரவாத தாக்குதல் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து நடந்து வந்தது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நமது வீரர்களை தொடர்ந்து கொன்றனர். நமது நகரங்களில் குண்டு வைத்தனர். சதி செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். அப்போது வலுவான பதிலடி கொடுக்கப்படவில்லை.
பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் ஆதரவுடன் உரி, புல்வாமா மற்றும் பஹல்காமில் 3 தீவிரவாத தாக்குதல் நடைபெற்றன. உரி தாக்குதலுக்குப்பின் நாம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற பெயரில் துல்லிய தாக்குதல் நடத்தினோம். புல்வாமா தாக்குதலுக்குப்பின் விமான தாக்குதல் நடத்தி எச்சரிக்கை விடுத்தோம். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப்பின், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.
பெண்களுக்கு கவுரவம்: நாட்டில் உள்ள பெண்களை கவுரவிக்கும் வகையில், பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பிரதமர் மோடி பெயர் சூட்டினார். நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து முதல் முறையாக நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ தொலைவில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது.
அணு குண்டு மிரட்டல்: அணு குண்டுகள் உள்ளது என மிரட்டினால் நாம் பயந்துவிடுவோம் என பாகிஸ்தான் நினைத்தது. ஆனால், நமது ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது.
இந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. 15 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. மீண்டும் தாக்க முடியாத நிலைக்கு பாகிஸ்தான் விமானப்படையை நமது விமானப்படை முடக்கியது. ராணுவமும், தீவிரவாதிகளின் 9 பயிற்சி முகாம்களை அழித்தது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.