எம்.ஜி.ஆர் நடித்த மன்னர் கதையை கொண்ட படங்களில் ஒன்று, ‘அரச கட்டளை’. எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் கதை இலாகா உருவாக்கிய இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் சொர்ணம். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி இயக்கி, கவுரவ வேடத்தில் நடித்தார். சத்யராஜா பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி,ஜெயலலிதா, எம்.என்.நம்பியார், நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர், சி.டி.ராஜகாந்தம், ஃபிரண்ட் ராமசாமி, அசோகன், மாதவி, சந்திரகாந்தா, சகுந்தலா, குண்டுமணி என பலர் நடித்தனர். பி.எஸ்.வீரப்பாவுக்கும் கே.ஆர்.ராமசாமிக்கும் கவுரவ வேடம் என்றாலும் முக்கியமான கதாபாத்திரங்கள்.
டைட்டில் கார்டில் ‘அபிநய சரஸ்வதி’ என்று சரோஜாதேவிக்கும் ‘கவர்ச்சிக் கன்னி’ என்று ஜெயலலிதாவுக்கும் கேப்ஷன் வைத்திருந்தார்கள். குமரி நாட்டின் மன்னனான பி.எஸ்.வீரப்பாவுக்கு நாட்டில் நடப்பது எதுவும் தெரியவில்லை. அமைச்சர் ஆர்.எஸ்.மனோகர் மக்களுக்கு அதிக வரி விதித்து வாட்டி வதைக்கிறார். மக்கள் கொந்தளிக்கின்றனர். புரட்சி குழு உருவாகிறது. அந்தக் குழுவின் இளைஞரான எம்.ஜி.ஆர், ஒரு கட்டத்தில் நாட்டின் நிலைமையை மன்னனுக்கு எடுத்துக்கூற, மன்னன் அதிர்ச்சி அடைகிறார். பின்னர் மனம் மாறி, ‘மக்களின் மனதறிந்த நீயே இனி மன்னன். இது அரச கட்டளை’ என்று கூறிவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். ஆட்சிக்கு வருகிறார் எம்.ஜி.ஆர். பிறகு நடக்கும் சூழ்ச்சிகளை எப்படி முறியடிக்கிறார் என்று கதை செல்லும்.
இந்தப் படத்துக்கு முதலில் ‘பவானி’ என்று தலைப்பு வைத்திருந்தனர். ஏ.கே. வேலன் எழுதிய இந்தக் கதையை, மஸ்தான் இயக்க இருந்தார். எம்.ஜி.சக்கரபாணி தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அதன் அடுத்த கட்ட விவாதங்களுக்குப் பிறகு எல்லாம் மாறியது. தலைப்பை ‘அரச கட்டளை’ என மாற்றி சக்கரபாணி இயக்கினார்.
66-ம் ஆண்டில் தொடங்கிய இந்தப் படத்தின் வேலைகள் 90 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார் எம்.ஜி.ஆர். அவர் சுடப்பட்டபோது தயாரிப்பில் இருந்த படங்கள் இரண்டு. ஒன்று, ‘அரச கட்டளை’, மற்றொன்று ‘காவல்காரன்’. எம்.ஜி.ஆர் உடல்நிலை காரணமாக இரண்டு படங்களும் தாமதமானது. பின்னர், எம்.ஜி.ஆரின் குரல் மாறிய நிலையில் டப்பிங் செய்யப்பட்டு, படம் வெளியானது. ஆனாலும் அந்த குரல் மாற்றம் ‘அரச கட்டளை’யில் அவ்வளவாகத் தெரியவில்லை.
இருந்தாலும் எம்.ஜி.ஆர் குணமடைந்த பின் வெளியான முதல் படம் இது என்பதால், படம் பார்த்த ரசிகர்கள் அவர் குரல் மாறிவிட்டதைக் கவலையுடன் பேசிக்கொண்டார்கள்.படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். ஆலங்குடி சோமு, வாலி, முத்துக்கூத்தன் பாடல்கள் எழுதினர். ‘என்னை பாட வைத்தவன் இறைவன்’ , ’முகத்தைப் பார்த்ததில்லை’, ‘பண்பாடும் பறவையே என்ன தூக்கம்?’, ‘புத்தம் புதிய புத்தகமே’, வேட்டையாடு விளையாடு’, ‘எத்தனை காலம் கனவுகள் கண்டேன்’ என அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாயின.தன்னை பெருமையாகப் பேசுவதற்காக மற்றவர்களை மட்டம் தட்டுவதை விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர். இந்தப் படத்துக்காகக் கவிஞர் வாலியிடம் பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர். ‘ஆண்டவன் கட்டளைக்கு முன்னாலே- அரச கட்டளை என்னாகும்?’ எனப் பல்லவி எழுதியிருந்தார் வாலி. இது எம்.ஜி.ஆருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் சிவாஜி நடித்த படம், ஆண்டவன் கட்டளை. இது எம்.ஜி.ஆர் படம்.
அவருக்கு கோபத்தை ஏற்படுத்திய வாலி, இதுதொடர்பாக என்னதான் விளக்கம் சொன்னாலும் ஏற்க மறுத்துவிட்டார், எம்.ஜி.ஆர். இதையடுத்து பாடலாசிரியர் முத்துக்கூத்தனிடம் அந்தப் பாடலை எழுதச் சொன்னார். அதுதான் ‘ஆடி வா பாடி வா’ பாடல்.எம்.ஜி.ஆர்- பி.எஸ்.வீரப்பா, எம்.ஜி.ஆர்- அசோகன் ஆகியோருக்கு இடையேயான வாள்சண்டைகள் பேசப்பட்டன. 1967-ம் ஆண்டு மே 19-ம் தேதி வெளியான இந்தப் படம், 10 வாரங்கள் ஓடின. எம்.ஜி.ஆரின் ஹிட் படங்கள் ஓடும் நாட்களை விட இது குறைவு என்கிறார்கள்.