லக்னோ: உத்தரபிரதேச அரசு, சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக, கட்டார்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தை துத்வா புலிகள் காப்பகத்துடன் இணைக்கும் நாட்டின் முதல் விஸ்டாடோம் ரயில்பெட்டி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சி ரயில் வழியாக ஒரு தனித்துவமான ஜங்கிள் (காட்டு) சபாரி அனுபவத்தை வழங்குவதன் மூலம் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுலா ரயிலில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் வெளிப்படையான கூரைகள் கொண்ட விஸ்டாடோம் ரயில் பெட்டிகள் உள்ளன, இதனால் பயணிகள் பசுமையான வன நிலப்பரப்புகளின் அற்புதமான காட்சிகளை நேரடியாக கண்டு அனுபவிக்க முடியும். இந்த ரயில் பல்லுயிர் மற்றும் இயற்கை காட்சிகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக 107 கிலோமீட்டர் பயணத்தை வழங்குகிறது, ஒவ்வொரு பயணமும் சுமார் 4 மணி நேரம் 25 நிமிடங்கள் நீடிக்கும்.
டிக்கெட் விலை: தற்போது, இந்த சேவை வார இறுதி நாட்களில் இயங்குகிறது, ஆனால் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈடுபடுத்தும் வகையில் தினசரி அட்டவணையாக இதை விரிவுபடுத்த உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. டிக்கெட் விலை ஒரு நபருக்கு ரூ.275 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் காலை 11:45 மணிக்கு பஹ்ரைச்சில் உள்ள பிச்சியா நிலையத்தில் தொடங்கி மாலை 4:10 மணிக்கு லக்கிம்பூர் கெரியில் உள்ள மைலானி நிலையத்தை சென்றடையும். துத்வா மற்றும் பாலியா கலான் உட்பட ஒன்பது நிலையங்களில் இந்த ரயில் நிற்கிறது. எதிர் ரயில் காலை 6:05 மணிக்கு மைலானியில் இருந்து புறப்பட்டு காலை 10:30 மணிக்கு பிச்சியாவை வந்தடையும்.