மணிரத்னம் இயக்கத்தில் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள படம், ‘தக் லைஃப்’. இதில் சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 5-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் டிரெய்லர் நேற்று முன் தினம் வெளியிடப் பட்டது.
அப்போது கமல்ஹாசனிடம், சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் கதை இதுதான் என்று சிலர் எழுதி வருகின்றனர். அதுபற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அதில் சில கதைகள் நன்றாக இருந்தன. நான் விருமாண்டி படத்தை எடுக்கும்போது சிலர் இதுதான் கதை என்று ஐந்தாறு கதைகளை எழுதியிருந்தார்கள். நீங்கள் எழுதிய கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இது வேறு கதை என்று எழுதினேன்” என்றார்.
சமூக வலைதளங்களில் தங்களைப் பற்றி வரும் விமர்சனங்களை பார்ப்பீர்களா? என்று மணிரத்னத்திடம் கேட்டபோது, “சமூக வலைதளங்களில் இருந்து இப்போது தப்பிக்கவே முடியாது. கண்டிப்பாக அதில் வரும் தகவல்களை, விமர்சனங்களை பார்க்கிறேன். நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன். என் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் இருப்பது பற்றி கேட்கிறார்கள். எனக்குத் தெரிந்த பெண்கள் எல்லோருமே வலிமையானவர்களாக இருந்தார்கள். அதனால் அது என் படங்களிலும் இயல்பாகவே பிரதிபலிக்கிறது” என்றார்.நடிகர் சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்தப் படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.