மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனகர்த்தர் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சென்று ஆதீன குருமூர்த்தங்களில் நேற்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இன்று (மே 19) சிவிகை பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொள்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆண்டுப் பெருவிழா, ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு விழா மே 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் கடந்த 15-ம் தேதியும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடைபெற்றன.
இந்நிலையில், ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வெள்ளி நாற்காலி பல்லக்கில் சென்று, தருமபுரம் ஆதீன திருமடத்தின் மேல வீதியில் உள்ள, மடத்தின் முந்தைய ஆதீனகர்த்தர்களின் குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு செய்தார். 3 யானைகள், குதிரை ஆகியன முன்செல்ல, மங்கல வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வெள்ளி நாற்காலி பல்லக்கை சுமந்து சென்றனர்.
இதில், கட்டளை தம்பிரான் சுவாமிகள், அடியவர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று இரவு 9 மணியளவில் தருமபுரம் ஆதீனம் சிவிகை பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேள்கிறார். நாளை அதிகாலை பக்தர்களுக்கு ஆசி வழங்கும் ஞானகொலுக்காட்சி நடைபெற உள்ளது.