சென்னை: மாணவர்களின் கல்வியில் திமுக அரசு தலையிட வேண்டாம் என தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக பாஜக சார்பில் சென்னை விருகம்பாக்கம், தி.நகர் உள்பட 6 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், பழங்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாஜகவை பார்த்து சூரியன் அச்சப்படும் காலம் வந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி விவாகரத்து கூட்டணி போல போய் கொண்டிருக்கிறது. பாஜக கூட்டணி நல்ல குடும்பம் போல மகிழ்ச்சியாக இருக்கிறது. பாஜக பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கிறது என்றும், இண்டியா கூட்டணி பலம் இழந்த கூட்டணியாக இருக்கிறது என ப.சிதம்பரம் கூறுகிறார். ப.சிதம்பரம், சசி தரூர் என எதிர்கட்சிகளும் பாஜகவை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
பாராளுமன்ற குழுவை உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அனுப்புகிறார். அதில் ஒரு குழுவில் கனிமொழி தலைமை ஏற்றுயிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் பிரதமர் செயல்படுகிறார். நாட்டுக்கு பிரச்சினையென்றால் அனைவரும் இப்படி தான் இணைந்து பணியாற்ற வேண்டும். காங்கிரஸ் போல குற்றம் சொல்லிக்கொண்டிருக்க கூடாது. திமுக அரசு நினைப்பதை தான் தமிழக குழந்தைகள் படிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
அவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பம் இருக்க கூடாது என்ற ஆணவத்தில் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். புதிய கல்விக் கொள்கை மதயானை என்கிறார்கள். புதிய கல்வி கொள்கை ஒன்றும் மதயானை கிடையாது. தங்களை மீறி எதையும் செய்ய முடியாது என்ற ஆணவத்துடன் திமுக அரசு நடந்து கொள்வதற்கு பெயர் தான் மதயானை. தமிழக பெற்றோர் சார்பில் நான் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து குழந்தைகளின் கல்வியில் திமுக அரசு தலையிட வேண்டாம்.
தமிழ் தேர்வில் 8 பேர் மட்டுமே நூற்றுக்குநூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மதுரையில் ஒரு பள்ளியில் தமிழாசிரியர் இல்லை என்பதால், அந்த பள்ளியில் தமிழ் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். இவர்கள் தான் தமிழை வளர்ப்பவர்களா? மு.க.ஸ்டாலின் இனி நிரந்தரமாக ஊட்டிக்கு செல்லலாம்.
ஏனென்றால் மக்கள் திமுகவை நிராகரிக்க போகிறார்கள். ஆசிரியர் பணியிடங்கள், செவிலியர் பணியிடங்கள், காவல்துறை பணியிடங்கள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் முதல்வர் ஸ்டாலின் உல்லாச பயணம் சென்று வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.