பாகிஸ்தானைவிட நரகம் மேலானது என்று பாலிவுட் கதாசிரியர் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார்.
சிவசேனா (உத்தவ் அணி) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது அரசியல் பயணம் குறித்து புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாசிரியரும் பாடலாசிரியருமான ஜாவித் அக்தர் (80) பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது: என்னை இருதரப்பினரும் விமர்சிக்கின்றனர். ஒரு தரப்பினர் என்னை காஃபிர் என்று கூறுகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் நிச்சயமாக நரகத்துக்கு செல்வேன் என்று அவர்கள் சாபமிடுகின்றனர். மற்றொரு தரப்பினர் என்னை ஜிகாதி என்று விமர்சிக்கின்றனர். அவர்கள் என்னை பாகிஸ்தான் செல்லுமாறு கூறுகின்றனர்.
இருதரப்பினரின் கூற்றுப்படி எனக்கு 2 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று நரகத்துக்கு செல்ல வேண்டும். இல்லையெனில் நான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானைவிட நரகம் மேலானது. நான் நரகத்துக்கே செல்ல விரும்புகிறேன். என்னுடைய 19-வது வயதில் மும்பைக்கு வந்தேன். மும்பையும் மகாராஷ்டிராவும்தான் என்னை வாழ வைத்தது. அந்த நன்றியை ஒருபோதும் மறக்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் மனதளவில் பாகிஸ்தானியர்கள் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறி வருகிறது. இதற்கு ஜாவித் அக்தர் கடும் ஆட்பேசம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்மையில் அவர் கூறியதாவது: காஷ்மீர் முஸ்லிம்கள் மனதளவில் பாகிஸ்தானியர்கள் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதில் துளியும் உண்மை கிடையாது. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் ராணுவம் தீவிர முயற்சி செய்தது.
அப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக காஷ்மீர் முஸ்லிம்களே தீரமாக போரிட்டனர். சுமார் 3 நாட்களுக்கு பிறகே இந்திய ராணுவம் காஷ்மீருக்கு சென்று பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி அடித்தது. காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியாவை விரும்புகின்றனர். அவர்கள் இந்தியர்கள் என்பதே உண்மை.
தற்போது காஷ்மீர் அபரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் காஷ்மீரில் குவிந்து வருகின்றனர். காஷ்மீரின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற தீயநோக்கத்தில் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதை காஷ்மீர் மக்கள் நன்கு அறிவார்கள். இவ்வாறு ஜாவித் அக்தர் தெரிவித்தார்.