டாஸ்மாக்கில் நடைபெற்ற ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு விவகாரத்தில் 2-வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையில் சொத்து பத்திரங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனையின் போது டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்பட 3 பேரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று நேரில் விசாரணை நடத்தினர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள விசாகன் வீடு, ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, சூளைமேடு ராஜகீழ் வீதியில் உள்ள தனியார் மதுபான நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வரும் மேகநாதன் வீட்டில் சோதனை நடத்தினர்.
மேலும், திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் வீடு, சாஸ்திரி நகர் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் வீடு, சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் முதல் தெருவில் உள்ள பாபு வீடு, தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள கேசவன் வீடு, எம்ஆர்சி நகரில் உள்ள ரத்தீஷ் என்பவர் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். விசாகன் வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள், மதியம் 3.45 மணி அளவில் அவரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று இரவு 9 மணி வரை விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது காரிலேயே வீட்டுக்கு அழைத்து சென்று மீண்டும் அவரது வீட்டில் சோதனையை தொடர்ந்தனர். அனைத்து இடங்களிலும் விடிய விடிய நடந்த சோதனை 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. சோதனை நடந்து கொண்டிருக்கும் போது, நேற்று காலை 10.45 மணி அளவில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன், தொழிலதிபர் தேவக்குமார், மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் ஆகிய மூன்று பேரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் பயன்படுத்திய செல்போன், லேப்டாப், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதற்கிடையில் நேற்று முன் தினம் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனின் செல்போனை ஆய்வு செய்த போது, அவர் ரத்தீஷ் என்பவரிடம் அதிக நேரம் செல்போனில் பேசியிருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதன் அடிப்படையிலேயே, எம்ஆர்சி நகரில் உள்ள ரத்தீஷ் வீட்டுக்கு நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று சோதனை செய்தனர்.
சோதனைக்கு சென்ற போது அவரது வீடு திறந்திருந்தது. ஆனால், ரத்தீஷ் வீட்டில் இல்லை. அதிகாரிகள் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு தான் அவர் வெளியே சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நேற்றும் நீடித்தது. சோதனையில் அவரது வீட்டிலும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரத்தீஷ் வீட்டில் இல்லாததால், ரத்தீஷின் வீட்டை பூட்டி சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ரத்தீஷ் அதிகார மையத்தில் உள்ள முக்கியமானவருடன் தொடர்பில் இருப்பதாகவம், இந்த விவகாரத்தில் ரத்தீஷ்க்கு முக்கிய பங்கு இருப்பதாகவும், அவர் வீட்டில் ம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தினால் முழு விவரங்களும் தெரிய வரும் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. எனவே, ரத்தீஷிடம் விசாரணை மேற்கொள்ள அவரை தேடும் பணியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி உள்ளனர். இதற்கிடையில் அவர் வெளிநாடு சென்றிருக்கலாம் என்ற தகவலும் அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளது.
இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்த இந்த சோதனையில் சொத்து பத்திரங்கள், டாஸ்மாக் டெண்டர் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள் என பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். வழக்கு தொடர்பான புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து விவரங்கள், ஆவணங்கள் குறித்த முழு விவரங்களை தற்போது வெளியிட இயலாது எனவும், சோதனை முடிவுற்ற பின்னர் அனைத்து தகவல்களையும் வெளியிடுவோம் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால் வழக்கு தொடர்பான நபர்களை விசாரணை அழைப்போம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.