புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று செலுத்தும் செயற்கைக்கோள் மூலம் இரவுநேர கண்காணிப்பு திறன் அதிகரிக்க உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் புதிய ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தியது. இஓஎஸ்-09 என்ற இந்த ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் 1,696 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமார் 500 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இஸ்ரோவின் 101-வது ராக்கெட் இதனை விண்ணில் செலுத்தியது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் வடிவமைக்கப்பட்டது.
இந்த ரேடார் செயற்கைக்கோள் அனைத்து காலநிலையிலும் குறைந்த வெளிச்சத்திலும் பூமியின் மேற்பரப்பை தெளிவாக படம்பிடிக்கக் கூடியது. இது நாட்டின் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு திறனுக்கு மேலும் பலம் சேர்க்கும் என கூறப்படுகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் மத்திய அரசு ராணுவ நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து இந்தியா -பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு,எல்லையில் அமைதி நிலவி வருகிறது. என்றாலும் மத்திய அரசு விழிப்புடன் இருந்துவரும் நிலையில் இந்த செயற்கைக்கோள் மூலம் இரவுநேர கண்காணிப்பு திறன் அதிகரிக்க உள்ளது.
விண்வெளியில் இந்தியா ஏற்கெனவே நிலைநிறுத்தியிருக்கும் 57-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களின் தொகுப்பில் இஓஎஸ்-09 கூடுதலாக இடம்பெறும். மேலும் எல்லையை கண்காணிக்கும் 5-வது செயற்கைக்கோளாக இது இருக்கும்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறுகையில், “நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. இந்த நாடு தனது 7,000 கி.மீ. கடற்கரைப் பகுதிகளையும் ஒட்டுமொத்த வடக்குப் பகுதியையும் கண்காணிக்க வேண்டும். செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் இல்லாமல் நாடு இதனை சாதிக்க முடியாது’’ என்றார். மத்திய விண்வெளி தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், “துல்லியம், குழுப்பணி, பொறியியல் சக்தி ஆகியவை இந்தியாவின் விண்வெளி லட்சியங்களை வலுப்படுத்துகின்றன’’ என்றார்.