சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுகவில் மண்டல அளவில் கனிமொழி, செந்தில் பாலாஜி மற்றும் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் என 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் திமுக அரசு, தொடர் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்ற நோக்கில், கடந்தாண்டு முதலே தேர்தலுக்கான ஆயத்த பணிகளைத் தொடங்கி விட்டது.
அந்தவகையில், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவினர், மாவட்ட வாரியாக அனைத்து அணிகளின் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, ஒன்றிய அளவி்ல் பொறுப்பாளர்கள் நியமிப்பது, மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்டவை தொடர்பாக, தலைமைக்கு பரிந்துரைகளை அளித்தனர்.
இதையடுத்து, தற்போது மாவட்ட வாரியாக பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு, பூத் கமிட்டி உறுப்பிரனர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், ஆயத்தப் பணிகளை திமுக முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, தற்போது மண்டல அளவில் தேர்தல் பணிகளை விரைவுபடுத்த பொறுப்பாளர்களை திமுக தலைமை முடிவெடுத்து, அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுள்ளனர்.
இதற்காக 7 மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பாளராகியுள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆ.ராசா எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் வட மாவட்டங்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு அமைச்சர் சக்கரபாணி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மண்டலவாரியாக மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் என்பது வழக்கமான ஒன்று என்றாலும், அந்தந்த மண்டலங்களில் வாழும் சமுதாயத்தினரை பிரதிபலிக்கும் வகையில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மண்டல பொறுப்பாளர்கள் முதல்கட்டமாக ஒன்றிய அளவில் 1,244 சாதனை விளக்கக் கூட்டங்களை நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்வார்கள். அடுத்த கட்டமாக மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து வேட்பாளர்கள் தேர்விலும் முக்கியப் பங்காற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது.