சென்னை: ‘தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை மருத்துவக் கல்லூரிகள் முழுமையாக நிறைவேற்றும் வகையில், அரசின் கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும்’ என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாததால் விளக்கம் கேட்டு, தமிழகத்திலுள்ள 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் பற்றாக்குறை, போதுமான அளவு வருகைப்பதிவு இல்லாமை, பணியாளர்கள், ஆய்வகங்கள் பற்றாக்குறை, அறுவை சிகிச்சைகள் செய்யப்படாமை போன்ற குறைபாடுகள் நோட்டீஸில் இடம்பெற்றுள்ளன.
ஆண்டுதோறும் நடைபெற வேண்டிய பதவி உயர்வு கலந்தாய்வு உரிய நேரத்தில் நடத்தாதது, காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பாதது, புதிய பணியிடங்களை உருவாக்காதது போன்றவை பற்றாக்குறைக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. அரசின் தவறான கொள்கையே வழக்குகளுக்கும், பேராசிரியர்கள் பற்றாக்குறைக்கும் அடிப்படை காரணமாகும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக சுகாதாரத் துறையில் இருந்த நிலை வேறு. இப்போதைய நிலை வேறு. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களுக்கான புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. இது மருத்துவர்களுக்கு பணிச் சுமையை உருவாக்கியுள்ளது. நோயாளிகளுக்கும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இதுகுறித்து சுகாதாரத்துறை கவலைப்படவில்லை.
தேசிய மருத்துவ ஆணைய சட்ட விதிகளின்படி மருத்துவ பேராசிரியர்களுக்கு இருக்க வேண்டிய கல்வித் தகுதி, ஆய்வு கட்டுரைகள் வெளியிடல், முதுநிலை படிப்புக்கு பிந்தைய அனுபவ காலம் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு, தமிழக அரசின் கொள்கைகளில் உரிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.
இன்றைய காலத்துக்கு ஏற்ற கொள்கையை வகுத்து செயல்படாவிட்டால், பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்க்க முடியாமல் போய்விடும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, காலத்துக்கேற்ப அரசு மருத்துவமனைகள் திறம்பட செயல்பட உரிய கொள்கை முடிவுகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
இதன் மூலமாக மட்டுமே, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை, அரசு மருத்துவக் கல்லூரிகள் முழுமையாக நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.