சென்னை: பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய 8.07 லட்சம் மாணவர்களில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட 6.43 சதவீத மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 282 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 2,042 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,316 மையங்களில் கடந்த மார்ச் 5 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. 8.18 லட்சம் பேர் பதிவு செய்த நிலையில், 4.25 லட்சம் மாணவிகள், 3.82 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 8.07 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 11,025 பேர் பங்கேற்கவில்லை.
சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று வெளியிட்டார். மதியம் 2 மணி அளவில் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.
தேர்வு எழுதியதில் 4.04 லட்சம் மாணவிகள், 3.39 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 7.43 லட்சம் பேர் (92.09%) தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட (91.17%) 0.92 சதவீதம் அதிகம். மாணவிகள் 95.13 சதவீதமும், மாணவர்கள் 88.70 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த முறையும் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைவிட மாணவிகள் 6.43 சதவீதம் முன்னிலையில் உள்ளனர். 7,558 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 282 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 2,042 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 2024-ல் இந்த எண்ணிக்கை 1,964 ஆக இருந்தது.
அரியலூர் முதலிடம்: ஒட்டுமொத்த தேர்ச்சியில் மாவட்ட அளவில் 97.76 சதவீதத்துடன் அரியலூர் முதல் இடம் பெற்றுள்ளது. ஈரோடு (96.97%), விருதுநகர் (96.23%) அடுத்த 2 இடங்களில் உள்ளன. கடைசி இடத்தில் வேலூர் (85.88%) உள்ளது. தலைநகரான சென்னை 90.93 சதவீத தேர்ச்சியுடன் 25-வது இடத்தில் உள்ளது.
அரசுப் பள்ளிகளை பொருத்தவரை, அரியலூர் (96.94%) முதல் இடம் பிடித்துள்ளது. நீலகிரி (78.97%) கடைசி இடத்தில் உள்ளது. 4,326 தனி தேர்வர்களில் 950 (21.96%) பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 9,205 மாற்றுத் திறனாளிகளில் 8,460 (91.91%) பேரும், 125 கைதிகளில் 113 (90.40%) பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்கள் 582 பேர் உட்பட 8,446 பேர் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண் உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படாது. எனவே, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் கவலைப்பட வேண்டாம். தேர்ச்சி பெறாத மாணவர்களும் அடுத்து பிளஸ் 2 வகுப்புக்கு செல்லலாம். அவர்கள் ஜூலை 4-ம் தேதி முதல் நடத்தப்பட உள்ள துணை தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றால் போதும். இதில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனி தேர்வர்கள் சேவை மையங்கள் மூலமாகவும் மே 22 முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.