சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு எழுதிய 8.71 லட்சம் மாணவர்களில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவிகளே தேர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளனர். 1,867 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 4,917 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 4,113 மையங்களில் கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுத 8.87 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். 4.36 லட்சம் மாணவர்கள், 4.35 லட்சம் மாணவிகள் என மொத்தம் 8.71 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். இடைநிற்றல் உள்ளிட்ட காரணங்களால் 15,652 பேர் பங்கேற்கவில்லை.
88 முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 21-ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடந்தது. தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அனைத்து பணிகளும் முன்கூட்டியே முடிந்ததால் மே 16-ம் தேதியே முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டது.
அதன்படி, சென்னை டிபிஐ வளாகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டார். அடுத்த சில நிமிடங்களில், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.
தேர்வு எழுதியதில் 4.17 லட்சம் மாணவிகள், 4 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 8.17 லட்சம் பேர் (93.80%) தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட (91.55%) 2.25 சதவீதம் அதிகம். மாணவிகள் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம். 2013-ம் ஆண்டில் இருந்து பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தொடர்ந்து மாணவிகளே முன்னிலையில் உள்ளனர். 23,769 தனி தேர்வர்களில் 9,616 பேர் (40.46%) மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 12,290 மாற்றுத் திறன் மாணவர்களில் 11,409 (92.83%) பேரும், 237 கைதிகளில் 230 (97.05%) பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
7,555 மேல்நிலைப் பள்ளிகள், 4,930 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 12,485 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 1,867 அரசுப் பள்ளிகள்உட்பட மொத்தம் 4,917 பள்ளிகள்100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. கடந்த 2024-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 4,105 ஆக இருந்தது. அரசு பள்ளிகள் 91.26%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.63%, தனியார் சுயநிதி பள்ளிகள் 97.99% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அதேபோல, இருபாலர் பள்ளிகள் 94.06%, பெண்கள் பள்ளிகள் 95.36%, ஆண்கள் பள்ளிகள் 97.84% தேர்ச்சி பெற்றுள்ளன. ஆண்கள் பள்ளிகளைவிட, பெண்கள் பள்ளிகள் அதிக தேர்ச்சியை அடைந்துள்ளன.
பொதுத் தேர்வு எழுத முடியாதவர்கள், தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் இந்த கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியை தொடர ஏதுவாக, ஜூலை 4-ம் தேதி முதல் துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனி தேர்வர்கள் தேர்வுத் துறை சேவை மையங்கள் மூலமாகவும் மே 22 முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in எனும் தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டம் முதல் இடம்: ஒட்டுமொத்த தேர்ச்சியில் மாவட்டங்கள் அளவில் 98.31 சதவீதத்துடன் சிவகங்கை முதல் இடம் பெற்றுள்ளது. விருதுநகர் (97.45%),தூத்துக்குடி (96.76%), கன்னியாகுமரி (96.66%), திருச்சி (96.61%) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன. வேலூர் (85.44%) கடைசி இடத்தில் உள்ளது.தலைநகர் சென்னையில் தேர்ச்சி 90.73 சதவீதமாக உள்ளது.கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்தது. இந்த ஆண்டு அங்கு தேர்ச்சி விகிதம் குறைந்து, முதல் 5 இடங்களில்கூடஇடம்பெறவில்லை. கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படும் சிவகங்கை மாவட்டம் இந்த ஆண்டு முதல் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.அரசுப் பள்ளிகள் பிரிவிலும் சிவகங்கை (97.49%) மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது, விருதுநகர் (95.57%), கன்னியாகுமரி (95.47%) மாவட்டங்கள் 2, 3-ம் இடங்களை பெற்றுள்ளன. இதிலும் வேலூர் (82.17%) மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
23,444 பேர் நூற்றுக்கு நூறு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெவ்வேறு பாடங்களில் 23,444 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 10,838 பேர் ‘சென்டம்’ எடுத்துள்ளனர். தமிழ் 8 பேர், ஆங்கிலம் 346 பேர், கணிதம் 1,996 பேர், அறிவியல் 10,838 பேர், சமூக அறிவியல் 10,256 பேர் என 23,444 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.