கோவை: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், கோவையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் 474 மதிப்பெண் பெற்றுள்ளனர். கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன் – பாரதி செல்வி தம்பதியின் இரட்டை குழந்தைகளான கவிதா, கனிகா ஆகியோர் ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் ஒரே மாதிரியாக 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதில் கவிதா தமிழில் 95, ஆங்கிலத்தில் 98, அறிவியலில் 89, சமூக அறிவியலில் 98 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கனிகா தமிழில் 96, ஆங்கிலத்தில் 97, அறிவியலில் 92, சமூக அறிவியலில் 95 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இருவரும் கணித பாடத்தில் 94 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து கவிதா, கனிகா ஆகியோர் கூறும்போது, “எங்களின் தந்தை காவலாளியாகப் பணியாற்றி வருகிறார். கடவுளின் ஆசியால் இருவரும் ஒரே மதிப்பெண்ணை வாங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. பிளஸ் 1 வகுப்பில் இருவருமே உயிரியல் கணிதம் பாடப் பிரிவை எடுக்க உள்ளோம். ஆசிரியர்கள் நன்கு உதவினார்கள். நிறைய சிறப்பு வகுப்புகள் நடத்தினர். கல்விக் கட்டணத்துக்கு கூட உதவி செய்தார்கள். ஒரே மாதிரியான மதிப்பெண் எடுப்போம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்குவது தான் அடுத்த இலக்கு” என்றனர்.