புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தனியார் பள்ளிகள் 96.86 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. இதில் 40 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுச்சேரியில் அரசு பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறிவிட்டன. இருப்பினும் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி, காரைக்கால் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை கடந்த மார்ச் மாதம் எழுதினர். இதில் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த 3,912 மாணவர்கள், 3,627 மாணவிகள் என மொத்தம் 7,539 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 3,739 மாணவர்கள், 3,563 மாணவிகள் என மொத்தம் 7,302 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.86 ஆகும்.
புதுச்சேரி, காரைக்கால் இரு பிராந்தியங்களிலும் தனியார் பள்ளிகள் 100 உள்ளன. இதில். புதுச்சேரியில் 29, காரைக்காலில் 11 என 40 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. பல்வேறு பாடங்களில் 100 சதவீத மதிப்பெண்களை 196 பேர் எடுத்துள்ளனர். குறிப்பாக கணினி அறிவியலில் 76 பேரும், பிரெஞ்சு மொழிப்பாடத்தில் 44 பேரும், கணிப்பொறி பயன்பாட்டில் 31 பேரும், கணிதத்தில் 13 பேரும், வணிகவியலில் 10 பேரும் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.