2021 சட்டமன்றத் தேர்தலில் மகனுக்காக அறந்தாங்கி தொகுதியை அழுத்தம் கொடுத்து வாங்கிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், 2024 மக்களவைத் தேர்தலில் தனக்கு போட்டியிட தொகுதி இல்லாமல் போனதால் அப்செட் மோடுக்குப் போனார். இப்போது, 2026-ல் அறந்தாங்கி தொகுதியில் உதயசூரியன் போட்டியிட வேண்டும் என திமுக-வினர் உரிமைக் குரல் எழுப்புவதால் அரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கும் மீண்டும் அறந்தாங்கி சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான சு.திருநாவுக்கரசர் 1977 தொடங்கி 1996 வரை தொடர்ச்சியாக 6 முறை அறந்தாங்கி தொகுதியை வென்றவர். அமைச்சர், துணை சபாநாயகர் என ஒரு ரவுண்டு வந்தவர், ஒருகட்டத்தில் தனிக் கட்சி தொடங்கியும் அறந்தாங்கியில் ஆதிக்கம் செலுத்தினார். பின்னர், பாஜக-வில் இணைந்து மத்திய அமைச்சராகவும் வலம் வந்த அரசர், பிற்பாடு காங்கிரஸில் இணைந்து மாநில தலைவர் அந்தஸ்துக்கு தன்னை உயர்த்திக் கொண்டார்.
இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனது மகன் ராமச்சந்திரனை அறந்தாங்கியில் நிறுத்தி ஜெயிக்கவைத்தார் அரசர். அதேபோல், 2024-ல் எப்படியும் சோனியா, ராகுல் சிபாரிசில் திருச்சி தொகுதியை தனக்காக அவர் கேட்டு வாங்கிவிடுவார் என காங்கிரஸ்காரர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அது நடக்காமல் போனது. திருநாவுக்கரசருக்கு திருச்சி மீண்டும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் திருச்சி திமுக-விலும் சிலர் கர்வம்கட்டி காய்நகர்த்தினார்கள். இதை அப்போது வெளிப்படையாகவே சொன்ன அரசர், “எனக்கு மீண்டும் திருச்சி சீட் கிடைத்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த திமுக-வினர் யார் யார் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்” என்றார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலின் போது (அறந்தாங்கி தொகுதியை உள்ளடக்கிய) ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அறிமுகக் கூட்டம் அறந்தாங்கியில் நடந்தது. அப்போது, தொகுதி எம்எல்ஏ-வான ராமச்சந்திரனின் படம் இல்லாமலே ஃப்ளெக்ஸ் வைத்திருந்ததை காங்கிரஸார் சர்ச்சையாக்கினார்கள். அப்போது அங்கிருந்த அமைச்சர் ரகுபதியிடம், “அறந்தாங்கியை கூட்டணி கட்சிக்கே ஒதுக்குவதால் இங்கு திமுக வளர்ச்சி அடையவில்லை. அதனால் அடுத்த முறை அறந்தாங்கியில் உதயசூரியன் போட்டியிட வேண்டும். அதில்லாமல் மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கினால் அறிவாலயத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்போம்” என திமுக முன்னாள் எம்எல்ஏ-வான உதயம் சண்முகம் ஆவேசமாக பேசினார். இதை தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகச் சொல்லி திமுக-வினரை அமைச்சர் ரகுபதி அப்போது சமாதானப்படுத்தினார்.
இதன்பிறகு, எம்எல்ஏ-வான ராமச்சந்திரன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் திமுக-வினர் ஆர்வம் காட்டாமலேயே இருந்து வருகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய அறந்தாங்கி திமுக-வினர், “வெற்றி பெற்ற பிறகு திமுக-வினர் யாரையும் ராமச்சந்திரன் கண்டுகொள்வதில்லை. அரசு நிகழ்ச்சிகள் குறித்தும் தகவல் தெரிவிப்பதில்லை. எப்படியும் தனது தந்தையார் மூலமாக மறுபடியும் அறந்தாங்கி சீட்டை வாங்கிவிடலாம் என அவர் நினைக்கிறார். ஆனால், மீண்டும் அவருக்காக களப்பணி செய்யும் நிலையில் திமுக-வினர் இல்லை. திமுக லட்டு கணக்காய் ஜெயிக்கக் கூடிய அறந்தாங்கியை தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக காங்கிரஸுக்கு ஒதுக்கினால் ஒத்துழையாமை இயக்கம் தான் நடக்கும்” என்றனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராமிடம் கேட்டதற்கு, “யாருக்கு சீட் என்பதை எல்லாம் காங்கிரஸ் தலைமை பார்த்துக்கொள்ளும். ஆனால், ராமச்சந்திரனைப் பொறுத்தவரை அறந்தாங்கி தொகுதி வளர்ச்சிக்காக முதல்வர், துணை முதல்வரிடம் பேசி பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். அதனால், அறந்தாங்கி மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது. அதனால் மீண்டும் அவருக்கே சீட் கிடைக்கும்; அவரும் அமோக வெற்றி பெறுவார்” என்றார்.
இதனிடையே மே 11-ம் தேதி, ஆவுடையார்கோவில் அருகே நடந்த திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய உதயம் சண்முகம், “தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். நீங்கள் நின்றாலும் தோல்வி அடைவீர்கள். ஆகவே, அனைவரும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். இதை தளபதியிடமும் பேச தயாராய் இருக்கிறேன்” என்று அரசர் அண்ட் கோ-வை மறைமுகமாக சாடினார். அறந்தாங்கி மக்கள் இன்னமும் திருநாவுக்கரசரை தங்களின் செல்லப்பிள்ளையாகவே நினைக்கிறார்கள். அப்படி இருக்கையில், அரசர் குடும்பத்தை ஒதுக்கிவிட்டு திமுக-வுக்கு சீட் கொடுத்தால் அறந்தாங்கியில் சூரியன் உதிப்பது அத்தனை எளிதாகிவிடுமா என்ன?