வண்டலூர்: தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களின் பணியிலும், வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
‘காவல் துறையில் பெண்கள்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து 11-வது தேசிய மாநாடு வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நேற்று முன்தினம் தொடங்கியது இரண்டு நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தொடங்கி வைத்தார். நேற்று நடைபெற்ற மாநாட்டு நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:பாரம்பரிய குடும்பப் பணியிலிருந்து பெண்கள் காவல் அதிகாரியாக மாறுவது நமது சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். 50 ஆண்டுகளுக்கு முன்பு 22 பெண்களுடன் தொடங்கிய மகளிர் காவல் பிரிவு, தற்போது 27,000 பெண் காவல் துறையினரின் ஒரு பெரிய படையாக வளர்ந்துள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய ஒன்றாகும். தமிழகத்தில், சட்டம்-ஒழுங்கு, குற்றப் பிரிவு, போக்குவரத்து காவல் நிலையங்களில் 43 சதவீதம் பெண் காவல் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இது, மற்ற மாநிலங்களைவிட அதிகம்.
கடந்த 2023-ம் ஆண்டில்பெண் காவல் துறைக்காக முதல்வர் அறிவித்த காலை ரோல்கால் நேரத்தை தளர்த்துவது. காவல் துறையில் பணியாற்றும் பெண்களுக்காக தனிப்பட்ட ஓய்வறைகள், தங்கும் வசதி, குழந்தை பராமரிப்பு மையம், சிறந்த செயல் திறனை கொண்ட பெண்கள் காவலர்களுக்கு விருதுகள், பெண்கள் மேற்கொள்ளும் குடும்பப் பொறுப்புகளை கருத்தில் கொண்டு இடமாற்றம், விடுப்புகள் மற்றும் பணிநியமனக் கொள்கைகள்.
பெண் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுயபாதுகாப்பு பயிற்சி வழங்கும் ‘அவள்’ திட்டம். பதவி உயர்வுக்கான தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் வழிகாட்டிகள் அமைத்தல், அனைத்து பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான கருத்தரங்குகள் நடத்துதல் ஆகிய அனைத்தும் காவல்துறையிலுள்ள பெண்கள் வாழ்க்கையிலும் பணியிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் கூடுதல் தலைமைச்செயலர் ஆகியோருக்கு தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால், நினைவு பரிசு வழங்கினார். காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் தலைமை இயக்குநருக்கு துணை முதல்வர் நினை வுப் பரிசை வழங்கினார்.
நிகழ்ச்சியில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார், காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநர் ராஜீவ் குமார் ஷர்மா, தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தின் இயக்குநர் டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை டிஜிபி. சீமா அகர்வால், செங்கல்பட்டு ஆட்சியர் ச. அருண்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக மாநாடு குறித்த புத்தகத்தை துணை முதல்வர் முதல்வர் உதயநிதி வெளியிட்டார். நிறைவாக குழு புகைப்படம் எடுத்துகொண்டனர். முன்னதாக மாநாட்டில் காவல் துறையில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு, ஆண், பெண் அதிகாரிகளுக்கு சாத்தியமான முறையில் ஒரே நேரத்தில் பயிற்சி அளித்தல், அதிக எண்ணிக்கையில் பெண் கவாத்து பயிற்சியாளர்களை நியமித்தல், தாலுகா தலைமையகங்களில் 24×7 செயல்படும் முழுமையாக சீரமைக்கப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் இருக்க வேண்டும் என்பன உட்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.