சென்னை: இந்தியாவில் தற்போது அமைந்துள்ள ஆப்பிள் நிறுவன உற்பத்தி கூடங்களும், விரைவில் அமையவுள்ள புதிய உற்பத்தி கூடங்களும் இந்தியா மற்றும் அமெரிக்க சந்தையில் ஐபோன்களுக்கு உள்ள விநியோக ரீதியான டிமாண்டை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில்தான் இந்தியாவில் ஆப்பிளின் உற்பத்தி சார்ந்த கட்டமைப்பை தான் விரும்பவில்லை என அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் வசம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரடியாக தெரிவித்தார்.
ட்ரம்ப்பின் இந்த பேச்சு இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் அது சார்ந்த திட்டங்களை பாதிக்க செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தோஹாவுக்கு சென்றுள்ள ட்ரம்ப் அங்குள்ள தொழிலதிபர்கள் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். அப்போது முதலாவதாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் ஆலையை தோஹாவில் அமைப்பது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது பேசிய ட்ரம்ப், “ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்குடன் எனக்கு சிறிய பிரச்சினை உள்ளது. நான் உங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுள்ளேன். நீங்கள் 500 பில்லியன் டாலர் முதலீடு கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால், நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை நான் விரும்பவில்லை” என்றார். இருப்பினும் அது தொடர்பாக ஆப்பிள் தரப்பு எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம்: மொபைல் போன், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். அந்த நிறுவனத்தின் சாதனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளாக சீனா, இந்தியா உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா மூலம் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்திய அரசு வழங்கும் சலுகை, சீனாவில் நிலவும் கெடுபிடி போன்றவை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை அசெம்பிள் செய்யும் பணியை அமெரிக்காவுக்கு இடம்பெயரச் செய்வது சவாலான காரியம் என தகவல் கிடைத்துள்ளது. ஏனெனில், அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கான கூலி மிகவும் அதிகம். மேலும், அமெரிக்காவில் சிப் மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யாத காம்பனென்ட்கள் மட்டுமே ஆப்பிள் தயாரிக்கிறது.
இது தொடர்பாக ஆப்பிள் தரப்பு எந்தவித கருத்தையும் தெரிவிக்க முன்வரவில்லை. அதே நேரத்தில் இந்தியாவில் தங்களது தற்போதைய திட்டங்கள் எதையும் அதிபர் ட்ரம்ப்பின் கருத்து தாக்கத்தை ஏற்படுத்தாது என இந்திய அரசிடம் ஆப்பிள் நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்திக் கூடம் மூலம் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் ஐபோன் டிமாண்ட்களை ஈடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் அமைந்துள்ள உற்பத்திக் கூடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கிருஷ்ணகிரி மற்றும் தும்கூரில் உற்பத்தி பணிகள் தொடங்க உள்ளது. அங்கு கட்டுமான பணிகள் முழுமை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆப்பிள் சாதன உற்பத்தி கூடத்தில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 20 மில்லியன் (2 கோடி) ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 மாடல்களும் அடங்கும். மேலும், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் நேரடி விற்பனை மையங்களாக டெல்லி மற்றும் மும்பையில் ஆப்பிள் ஸ்டோரை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர உற்பத்தி சார்ந்த அடுத்த கட்ட திட்டங்கள் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ரீதியான ஒப்பந்தம் இறுதி செய்த பிறகு முடிவு செய்யப்படும் என தகவல் கிடைத்துள்ளது.