மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலை மதுரை தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை திரளான பக்தர்கள் தரிசித்தனர். நேற்றிரவு மூன்றுமாவடியில் ஆயிரக்கணக்கான பக்தர்களிடமிருந்து விடைபெற்று அழகர்கோவில் மலைக்குப் புறப்பட்டார். இன்று (மே 16) காலை கோயிலை அடைகிறார்.
மண்டூக முனிவருக்கு சாபம் தீர்க்க அழகர்கோயிலிருந்து கடந்த மே 10-ம் தேதி மதுரை புறப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் ராஜாங்க கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளினார். நேற்று அதிகாலை கள்ளழகர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின்னர், தல்லாகுளம் கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று, அழகர்கோவில் மலைக்குத் திரும்பும் வழியில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். வழிநெடுகிலும் மண்டபகப்படிகளில் எழுந்தருளி நேற்றிரவு 7 மணியளவில் மூன்றுமாவடி சென்றடைந்தார். அங்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கள்ளழகரை வழியனுப்பினர். இரவு 10 மணியளவில் சுந்தரராஜன்பட்டியில் உள்ள சிவகங்கை சமஸ்தான மண்டபத்தில் திருமஞ்சனமானார்.
இன்று (மே 16) அதிகாலை அப்பன்திருப்பதியிலுள்ள ஜமீன்தார் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். கள்ளந்திரி பொய்கைக்கரைப்பட்டி வழியாக காலை 10 மணியளவில் கள்ளழகர் இருப்பிடம் சேர்கிறார். நாளை (மே 17) உற்சவ சாந்தியுடன் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.