மதுரை: மதுரை ஆதீன மடத்துக்கு தம்பிரான்களை நியமனம் செய்யக் கோரி தருமபுரம் ஆதீனத்துக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞான சம்பந்த சுவாமிகளுக்கு, மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் எம்.சோலை கண்ணன் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: மதுரை ஆதீன மடத்தின் 293வது ஆதீன கர்த்தராக ஹரிஹர ஞான சம்பந்த தேசிகர் இருந்து வருகிறார். அவரை ஒரு சிலர் கைப்பாவையாக பயன்படுத்தி ஆதீன மடத்தின் முதன்மை நோக்கமான சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியை தடை செய்து வருகின்றனர்.
மதுரை ஆதீனம் மூலம் சைவத்தையும், தமிழையும் வளர்க்க பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள், பக்தர்கள் பல்வேறு கிராமங்களில் சொத்துக்களை தானமாக வழங்கி, அதிலிருந்து வரும் வருமானத்தை பயன்படுத்தி மடத்தின் நோக்கம் நிறைவேற செய்தனர். தற்போதைய ஆதீன கர்த்தர் வருமானங்களை முறையாக வசூலிக்காமலும், முந்தைய ஆதீன கர்த்தர் விற்பனை செய்த மடத்தின் சொத்துக்கைள மீட்டும் நடவடிக்கையை பாதியுடன் நிறுத்திக் கொண்டதும் தெரிகிறது.
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமாக கஞ்சனூர் உட்பட 4 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. தற்போதைய ஆதீனம் பொறுப்பேற்ற பிறகு இதுவரை 13-க்கும் மேற்பட்டோர் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாரும் தற்போது வேலையில் இல்லை. இதற்கு ஆதீனத்தின் நிர்வாகத் திறமையின்மையே காரணமாகும். ஆதீனத்துக்கு சொந்தமான பல்வேறு கட்டிடங்களிலிருந்து பல லட்சம் ரூபாய் வாடகை வர வேண்டியதுள்ளது.
ஆதீனத்தின் நிர்வாக திறமையின்மை மற்றும் திறமையான பணியாளர்கள் இல்லாததால் மடத்துக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. சைவ சமயத்தை வளர்க்க உருவாக்கப்பட்ட மதுரை ஆதீனத்தில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் மாறிவிட்டனர். ஆதீனமாக இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன், நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு நேர் மாறாக மதுரை ஆதீனம் உள்ளார். ஊடக வெளிச்சத்துக்காக பல நேரங்களில் தேவையில்லாமல் பேசியுள்ளார்.
சமீபத்தில் சென்னையில் மாநாட்டில் மத்திய அமைச்சர், மாநில ஆளுநர், உயர் நீதிமன்ற நீதிபதி அமர்ந்திருந்த மேடையில் தன்னை மாற்று மதத்தை சேர்ந்த இருவர் கொலை செய்ய வந்தாக பேசி தேவையற்ற நெருக்கடியை ஏற்படுத்தினார். பின்னர் ஆதீனம் கூறியது பொய் என்பதை காவல் துறையினர் வீடியோ வெளியிட்டு நிரூபித்துள்ளனர். தருமபுர ஆதீனத்தில் எண்ணற்ற தம்பிரான்கள், சிப்பந்திகள் உள்ளனர்.
மதுரை ஆதீனத்துக்கு தம்பிரான்கள் நியமனம் செய்தால் மட்டுமே, மதுரை ஆதீன மடத்தின் நிர்வாகம் சரியாக நடைபெறும். சைவப் பணியும், தமிழ் வளர்ப்பு பணியும் மதுரை ஆதீனத்தின் புனிதமும், புகழும், சொத்துகளும் காப்பாற்றப்படும். இதனால் மதுரை ஆதீனத்திற்கு போதிய அளவில் தம்பிரான்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.