சென்னை: ‘என்னை கணவனாக இல்லை, பொன் முட்டையிடும் வாத்து போலவே அவர் நடத்தினார். காதல் என்கிற பெயரில் என் பணம், சொத்து என எல்லாவற்றையும் தனக்காக பயன்படுத்திக் கொண்டார்’ என ஆர்த்தி ரவி குறித்து நடிகர் ரவி மோகன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ரவி மோகன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார். ரவி மோகன் – ஆர்த்தி ரவி பிரிவுக்கு காரணம் பாடகி கெனிஷா என்று பலரும் கூறிய நிலையில், ரவி மோகன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், அண்மையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர்.
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் நீண்டநாட்களாக மவுனம் காத்து வந்த ஆர்த்தி ரவி, முதல் முறையாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘18 ஆண்டுகளுக்கு முன்னர் நான் யாரது அருகில் காதலுடன், நம்பிக்கையுடன், உண்மையுடன் நின்றேனோ, அவர் என்னைவிட்டு விலகிச் சென்றுள்ளார். என்னை மட்டும் விட்டு விலகிச் செல்லவில்லை, எனக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் துறந்து சென்றுள்ளார்’ என்று தெரிவித்திருந்தார். வாசிக்க > “உங்களால் உண்மையை மாற்றி எழுதவே முடியாது!” – ஆர்த்தி ரவி பகிரங்க பதிவு
தற்போது நடிகர் ரவி மோகனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘இத்தனை வருடமாக என்னுடைய முதுகில் குத்தப்பட்டு இருந்தேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நான் விவாகரத்து கோருவதற்கு முடிவு செய்ததை எனது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் என்னை உண்மையாக நேசிக்கும் ரசிகர்களிடம் ஏற்கெனவே பகிர்ந்திருந்தேன். இந்த முடிவை, எனது முன்னாள் மனைவி உள்பட அனைவரின் தனியுரிமையை பாதுகாக்கும் விருப்பத்துடன் எடுத்தேன்.
சமீபத்திய பொது தோற்றங்களின் அடிப்படையில், எனது குணத்தை மட்டுமல்ல, பொய்யான குற்றச்சாட்டுகளால் நான் அவதூறு செய்யப்படுகிறேன். இந்த கட்டுக்கதையான குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். என்னுடைய சூழ்நிலைகளை முழுமையாக அறிந்து, புரிந்து, எனது முன்னாள் மனைவியுடனான திருமண வாழ்விலிருந்து நான் விலக முடிவு செய்தேன். ஆனால், எனது குழந்தைகளை விட்டு நான் விலக மாட்டேன். எனது குழந்தைகளே எனது நிரந்தர பெருமையும் மகிழ்ச்சியும் ஆகும்.
என்னுடைய இரு மகன்களுக்காக எல்லாவற்றையும் செய்வேன். எனது குழந்தைகளை நிதி ஆதாயத்துக்காகவும், பொது அனுதாபத்தை பெறுவதற்காக கருவிகளாகவும் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது நான் உடைந்துப் போகிறேன். அதேசமயம் பிரிவுக்குப் பிறகு நான் வேண்டுமென்றே அவர்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறேன்.
இப்போது, எனது குழந்தைகளை நான் பார்க்கவோ அணுகவோ முடியாதபடி கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பவுன்சர்கள் அவர்களுடன் செல்கின்றனர். எனது குழந்தைகள் ஒரு கார் விபத்தில் சிக்கியது, ஒரு மாதத்துக்குப் பிறகு ஒரு மூன்றாம் தரப்பினர் மூலமாகவே எனக்கு தெரிய வந்தது. காரை பழுதுபார்ப்பதற்கு காப்பீட்டுக்காக எனது கையொப்பம் தேவைப்பட்டபோது மட்டுமே எனக்கு அந்த விஷயம் தெரியவந்தது. இன்னும் அவர்களை சந்தித்து அவர்களின் நலனை அறிய அனுமதிக்கப்படவில்லை.
நான் எனது முன்னாள் மனைவியையும், குடும்பத்தையும் என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்து நேசித்து ஆதரித்தேன். விரைவில் அவர்களின் உண்மை அறிந்து ஒரு ஆணாகவும் தந்தையாகவும் விலகுவதற்கு எனக்கு எவ்வளவு வலிமை தேவைப்பட்டது என்பதை புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறேன்.
கெனிஷா பிரான்சிஸைப் பொறுத்தவரை, நீரில் மூழ்கும் ஒருவரைக் காப்பாற்றத் தேர்ந்தெடுத்த ஒரு தோழி அவர். என்னை உடைத்துக் கொண்டிருந்த ஒரு வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்ல தைரியம் மட்டுமே இருந்த எனக்கு, அவர் ஓர் உயிர்நாடியாக மாறினார். எனது பணம், வாகனம், ஆவணங்கள், ஏன் எனது அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு வெறுங்காலுடன் என் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய போதும் கெனிஷா எனக்காக நின்றார். சூழ்நிலையை உணர்ந்து, தயங்காமல் வந்த ஓர் அழகான துணை அவர். என் வாழ்க்கையில் ஒளியை கொண்டுவந்தவர்.
நான் சட்ட ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, நிதி ரீதியாக போராடும் அனைத்துப் போராட்டங்களையும் கெனிஷா நேரடியாக பார்த்தார். புகழுக்காகவோ, கவனத்துக்காகவோ அல்லாமல், இரக்கத்துடன் வலிமையுடன் என்னுடன் இருக்க தீர்மானித்தார். நான் மகிழ்ச்சியாக இருக்கத் தகுதியானவன் என்பதை எனக்கு நினைவூட்டியதும் அவர் தான்.
நான் சம்பாதித்தது, சொத்துகள், சோஷியல் மீடியா கணக்குகள், என் கரியர் முடிவு, என் பிள்ளைகளுடனான உறவு, அடிப்படை உரிமை, என் பெற்றோருடனான உறவு என எல்லாமே பறிக்கப்பட்டு பெரும் கடனுக்கான ஷ்யூரிட்டியில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறேன். இது எல்லாம் அவரும், அவரின் பெற்றோரும் சொகுசாக இருப்பதற்காக மட்டுமே.
கடந்த 5 ஆண்டுகளாக என் அப்பா, அம்மாவுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவிடவில்லை. என்னை கணவனாக இல்லை, பொன் முட்டையிடும் வாத்து போலவே அவர் நடத்தினார். காதல் என்கிற பெயரில் என் பணம், சொத்து என எல்லாத்தையும் தனக்காக பயன்படுத்திக் கொண்டார். அவரின் லைஃப்ஸ்டைல் தான் இந்த நிதி பிரச்சினைக்கு எல்லாம் காரணம்.
மிரட்டி பணம் பறிப்பவர்களின் குடும்பத்துடன் துயருற்றதை என்னைவிட வேறு யாரும் அதிகமாக புரிந்துகொள்ள முடியாது. ஆனால், எனக்கு உண்மை தெரியும். என்னை அறிந்தவர்களுக்கு என் நன்றி உணர்வு தெரியும். என்னை நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால், கெனிஷாவுக்கும் அதையே செய்வீர்கள் என நம்புகிறேன். என் வாழ்க்கையை யாரும் அழிக்க முடியாது. நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும்’ என்று ரவிமோகன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, யாரையும் குறிப்பிடாமல் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் பதிவொன்றை வெளியிட்டார். அதில் “ஆண்மையுள்ள ஒருவன் ஒருபோதும் கலவரமான உணர்ச்சிகளால் ஈர்க்கப்பட மாட்டான். அவனது இதயம் அமைதியைத் தரும் பெண்ணை நோக்கியே செல்லும். அந்த மென்மை நடிப்பல்ல, அது அமைதியின் வலிமை. அந்த மென்மையானவள் அவன் வலிமையுடன் எப்போதும் போட்டியிடமாட்டாள். மாறாக, அதை சமநிலைப்படுத்துவாள். அந்தப் பிணைப்பில் இருவரும் ஒருவருக்கொருவர் தத்தம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதோடு, தங்கள் சுயத்தையும் தக்க வைத்துக் கொள்கிறார்கள்” என்று கெனிஷா குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.