ராமேசுவரம்: பாம்பன் புதிய பாலம் திறக்கப்பட்டதால் திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டு ராமேசுவரம் வரையிலும் நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல் வழியாக மதுரை வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16343) இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் மதுரையில் இருந்து எதிர் மார்க்கத்தில் (வண்டி எண் 16344) திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு ஏசி முதல் வகுப்பு, ஒரு ஏசி இரண்டு டயர் கோச், ஏசி மூன்று டயர் கோச், 13 சிலிப்பர் கிளாஸ் கோச், மூன்று பொது இரண்டாம் வகுப்பு, இரண்டு இரண்டாம் வகுப்பு கோச் என மொத்தம், 23 பெட்டிகளை கொண்டது.
இந்த ரயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றதால் கோரிக்கை நிலுவையில் இருந்தது. இந்நிலையில், பாம்பன் புதிய பாலம் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டதால் திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டு, அது ராமேசுவரம் வரையிலும் நீட்டிக்கப்படும், இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையிலிருந்து ராமேசுவரத்துக்கு ஒரே ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மட்டும் உள்ளது. ராமேசுவரம் வருவதற்கு கேரளாவைச் சேர்ந்த பயணிகள் பெரும்பாலும் இந்த ரயிலையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேசுவரம் வரையிலும் நீட்டிக்கப்பட உள்ள நிலையில், அதிகளவில் கேரள பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேசுவரம் வருவதற்கு இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.