புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நிறுத்தி வைத்துள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஏப்ரல் 23-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுகிறது என்பது உட்பட 5 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
பாகிஸ்தானின் குடிநீர் தேவையில் 70 சதவீதத்துக்கும் மேல் பூர்த்தி செய்யக்கூடியது என்பதால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு அந்நாட்டுக்கு மிகப் பெரிய இடியாக அமைந்தது.
தொடர்ந்து மே 7ம் தேதி பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே தொடர்ந்து 4 நாட்கள் நடந்த மோதலில், பாகிஸ்தான் ராணுவம் கடும் இழப்புகளைச் சந்தித்தது. இதையடுத்து, மே 10ம் தேதி பாகிஸ்தான் டிஜிஎம்ஓ, இந்திய டிஜியும்ஓவை தொடர்பு கொண்டு ராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, மோதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானின் நீர்வள அமைச்சக செயலாளர் சையத் அலி முர்தாசா, இந்தியாவின் நீர்வள செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் ஒரு வாரத்திற்கு முன்பு வந்துள்ளது. அதில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் எனவே, பாகிஸ்தானின் சிந்து நதி ஆணையருடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய பிரதிநிதிகளை இந்தியா பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் பெயர் வெளியிட விரும்பாத அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1960 முதல் நடைமுறையில் உள்ள Indus Waters Treaty(IWT) ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக இரு நாடுகளும் சிந்து நதி ஆணையர்களை நியமித்துள்ளன. இந்த ஆணையர்களின் கடைசி சந்திப்பு மே 2022 இல் டெல்லியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஜனவரி 2023 முதல், ஒப்பந்தத்தை திருத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இந்தியா, பாகிஸ்தானுக்கு 4 முறை கடிதம் எழுதியுள்ளது, ஆனால், “திருப்திகரமான பதில்” கிடைக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அக்கடிதங்களில், IWT-ஐ நிறுத்தி வைத்ததற்கும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதற்கும் பாகிஸ்தான் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தகவல்.